இடிந்து விழும் நிலையில் உள்ள பழமையான கட்டிடம் அகற்றப்படுமா?
இடிந்து விழும் நிலையில் கொள்ளிடம் ரெயில் நிலையத்தில் உள்ள பழமையான கட்டிடத்தை அகற்ற வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்:
இடிந்து விழும் நிலையில் கொள்ளிடம் ரெயில் நிலையத்தில் உள்ள பழமையான கட்டிடத்தை அகற்ற வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறுகிய ரெயில் பாதை
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ரெயில் நிலையத்தில், குறுகிய ரெயில் பாதையில் ரெயில்கள் சென்று கொண்டிருந்தபோது ரெயில் நிலைய அலுவலக கட்டிடம் இருந்து வந்தது. அந்த கட்டிடத்தில் பயணிகளுக்கு பயணச்சீட்டு விற்பனை செய்தல்,பார்சல் புக்கிங், பொருட்கள் வைக்கும் அறை, நிலைய அலுவலர் அறை, பயணிகள் தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் இருந்து வந்தன.
குறுகிய ரெயில் பாதை மாற்றி அகல ரெயில் பாதை பயன்பாட்டுக்கு வந்தவுடன், ரெயில் நிலைய அலுவலக கட்டிடம் பழைய அலுவலக கட்டிடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு அதில் அலுவலகம் இயங்கி வருகிறது. ஆனால் பழைய கட்டிடம் 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில். அந்தக் கட்டிடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது.
உயிருக்கு ஆபத்து
இந்த கட்டிடத்தை சுற்றி மரங்கள், செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகின்றன. மேலும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் திகழ்ந்து வருகிறது. மேலும் இந்த கட்டிடத்திற்குள் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் இருந்து வருகின்றன. இந்த ரெயில் நிலையத்துக்கு செல்லும் பயணிகள் அந்த பழைய கட்டிடத்தை கடந்து தான் செல்ல வேண்டும். எனவே அப்பகுதியை பயணிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர்.
தற்போது இந்த கட்டிடம் எந்த பயனும் இல்லாமல் பயணிகளுக்கு இடையூறாகவும், இடத்தை அடைத்துக் கொண்டும் இருந்து வருகிறது.
மேலும் இந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பழமையான ரெயில் நிலைய கட்டிடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.