ஒட்டுமொத்த தூய்மைப்பணி
குத்தாலம் பேரூராட்சியில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி நடந்தது
குத்தாலம், ஜன.17-
குத்தாலம் தேர்வு நிலை பேரூராட்சியில் பொதுமக்கள் பங்களிப்புடன் மாபெரும் ஒட்டுமொத்த தூய்மைப்பணி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன், பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் ஆகியோர் தலைமை தாங்கினர். பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சம்சுதீன் முன்னிலை வகித்தார். இதில் குத்தாலம் ெரயில் நிலைய வளாகத்தில் பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், சமூக நல தொண்டு நிறுவன நிர்வாகிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள், தூய்மை காவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர். மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று திடக்கழிவு மேலாண்மை திட்டம் நெகிழி ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குப்பைகள் அகற்றப்பட்டு அந்த இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது. அப்போது குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா ராணி மற்றும் போலீசார், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், துப்புரவு ஆய்வாளர் சுப்ரமணியன், இளநிலை உதவியாளர் சுந்தர், துப்புரவு மேற்பார்வையாளர் சம்பந்தமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.