சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
கொல்லியங்குணத்தில் சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலம்:
மயிலம் பொம்மபுர ஆதினத்தின் முதற்குரு நாதர் ஸ்ரீபாலசித்தர். இவருடைய தவத்தால் மயிராசலம் எனும் மயிலம் மலையில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் காட்சி அளிக்கிறார். மயிலம் மலையில் வடகிழக்கு திசையில் கொல்லியங்குணம் பஸ் நிறுத்தம் அருகில் 6½ அடி உயரமுள்ள சிலையுடன் சுந்தர விநாயகர் கோவில் உள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் திருப்பணி நடைபெற்றது. ஆனால் அவை முழுமை பெறாமல் பாதியிலேயே நின்றது. எனவே மூலவரை மட்டும் பிரதிஷ்டை செய்தனர். அதன்பிறகு கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தது.
எனவே பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தாமல் இருக்கும் சுந்தர விநாயகர் கோவிலை புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மயிலம் பொம்மபுர ஆதினத்தின் 20-ம் பட்ட சிவஞான பாலய சுவாமிகள் திருப்பணிகள் செய்ய முன்வந்தார். அவரை தொடர்ந்து பலர் நன்கொடையும் கொடுத்தனர். இதனை தொடர்ந்து ஏற்கனவே இருந்த இடத்தில் இருந்து சற்று மேற்குபகுதியில் பல லட்சம் ரூபாய் செலவில் புதிய கோவில், மண்டபம் கட்டப்பட்டது.
கும்பாபிஷேகம்
இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 23-ந் தேதி சுந்தரவிநாயகர் அனுமதி பெறுதல், கணபதி வேள்வி, நவக்கிரக வேள்வி, தீபாராதனை நடந்தது. மேலும் 3 நாட்கள் யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் விமான கோபுரத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு மயிலம் பொம்மபுர ஆதினத்தின் 20-ம் பட்ட சிவஞான பாலய சுவாமிகள் விமான கலசங்களுக்கும் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார். பின்னர் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மூலவரான சுந்தரவிநாயகருக்கு மகா அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் 20-ம் பட்ட சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் கொல்லிங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமி வர்ணமுத்து, ஊராட்சி மன்ற துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள், கிராம நாட்டாண்மைகள், விழாக்குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.