கோவில்களில் உண்டியல்களை உடைத்து திருடியவர் கைது
வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதியில் கோவில் உண்டியல்களை உடைத்து திருடியவர் கைது செய்யப்பட்டார்.
உண்டியல்களை உடைத்து திருட்டு
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, ஆலங்காயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிறிய கோவில்களில் அவ்வப்போது உண்டியல் திருட்டு நடைபெற்று வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் ஆலங்காயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு ஆலங்காயம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார், ஆலங்காயம் பெரிய ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, ஏரி கரையோரம் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒருவர் நின்றிருந்தார். அருகில் சென்று பார்த்த போது, அவரது கையில் கோவில் உண்டியல் வைத்திருந்தார்.
கைது
உடனடியாக அவரை மடக்கி பிடித்து ஆலங்காயம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் ஆலங்காயம் பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 49) என்பதும், இரவு நேரங்களில் கோவில் உண்டியல்களை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைதுசெய்தனர். அவரிடமிருந்து உண்டியல் பறிமுதல் செய்யப்பட்டது.