தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

திருப்பத்தூரில் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் அருகே 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஆனந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடேசன் முன்னிலை வகித்தார். பொருளாளர் டி.ஆனந்தன் சிறப்புரை ஆற்றினார்.

கடன் தள்ளுபடி, அனுமதிக்கப்பட்ட பயிர்கடன், நகைக்கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் அனைத்திற்கும் உரிய தொகையை வட்டி இழப்பின்றி அனைத்து சங்கங்களுக்கும் வரவு வைத்து சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும். நகர கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் ஊதிய உயர்வு வழங்க அமைக்கப்பட்ட ஊதியக்குழு அறிக்கையை பெற்று புதிய ஊதியம் வழங்க வேண்டும். தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் கேரள மாநிலத்தில் வழங்கப்படுவது போல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தேர்தல் நேரங்களில் அதிக அளவில் கடன்கொடுக்கும் வகையில் பல விதிமுறைகள் வாய்மொழியாக தளர்த்தப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் விதிமீறல்கள் என தெரிவிக்கப்பட்டு பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுபோன்ற அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட துணை தலைவர் ராஜவேலு, இணைசெயலாளர்கள் மஞ்சுளா, வெங்கடேசன், போராட்டக்குழு தலைவர் பாபு, போராட்டக்குழு செயலாளர் சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அதைத்தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.


Next Story