கொசு மருந்து அடிக்காமலே பல லட்சம் ரூபாய் கையாடல்


கொசு மருந்து அடிக்காமலே பல லட்சம் ரூபாய் கையாடல்
x
தினத்தந்தி 23 May 2023 12:15 AM IST (Updated: 23 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் ஒன்றிய பகுதியில் கொசு மருந்து அடிக்காமலே அடித்ததாக கூறி பல லட்சம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கடலூர்

கடலூர்:

கடலூர் ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் பக்கிரி தலைமை தாங்கினார். துணை தலைவர் அய்யனார், வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து கவுன்சிலர்கள் சிலர், கொசு மருந்து அடிக்காமலே பல இடங்களில் மருந்து அடித்துள்ளதாக கூறி பல லட்சம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினர். அப்போது அதிகாரிகள், கொசு மருந்து அடிக்கும் தொழிலாளர்களுக்கு தான் கூலி தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என்றும், இனி கொசு மருந்து அடிக்க வரும் போது கவுன்சிலர்களிடம் தகவல் தெரிவிப்பதாகவும் கூறி சமாதானப்படுத்தினர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

சுடுகாடு அமைக்காவிட்டால் தீக்குளிப்பேன்

மதிவாணன்: கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் வளர்ச்சி பாதையிலேயே செல்லவில்லை. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 2 பேர் இருந்தும் இதுவரை எந்த ஒரு மக்கள் பணியும் செய்யப்படவில்லை. நத்தப்பட்டு ஊராட்சியில் சுடுகாடு அமைத்து தர வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதிகாரிகள், அரசியல்வாதிகளை பயன்படுத்திக்கொண்டு பணி செய்கின்றனர். எனவே நத்தப்பட்டில் சுடுகாடு வசதி ஏற்படுத்தி கொடுக்காவிட்டால் தீக்குளிப்பேன்.

ஞானசவுந்தரி துரை: சங்கொலிக்குப்பம் பகுதியில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால் கோடையை சமாளிக்க தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கொலிக்குப்பத்தில் பள்ளிக்கட்டிடத்தை சீரமைக்க இடிக்கப்பட்டது. ஆனால் இதுவரை பணிகளை தொடங்கவில்லை. எனவே விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறப்பதற்குள், பணிகளை தொடங்கி முடிக்க வேண்டும்.

சேதமடைந்த சாலை

குமுதம் சேகர்: ராமாபுரம் ஊராட்சி வண்டிக்குப்பத்தில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும். திருமாணிக்குழி, மாதா கோவில் காலனி, டி.புதுப்பாளையம் ஆகிய பகுதியில் சாலை அமைக்க வேண்டும்.

முரளி: கவுன்சிலராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை என்னுடைய ஒரு கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படவில்லை. இதனால் அரிசிபெரியாங்குப்பம் பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். கிரிஜா செந்தில்குமார்: பாதிரிக்குப்பம் பகுதியில் பல இடங்களில் சாலை சேதமடைந்து கிடக்கிறது. அதனை சீரமைக்க வேண்டும். வடிகால் வாய்க்கால் அமைத்து தர வேண்டும்.

அதற்கு ஒன்றியக்குழு தலைவர், கவுன்சிலர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story