மரங்கள் சாய்ந்து மின்கம்பங்கள் மீது விழுந்தன
குளச்சலில் சூறைக்காற்றுடன் மழை: மரங்கள் சாய்ந்து மின்கம்பங்கள் மீது விழுந்தன
குளச்சல்,
குமரி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. குளச்சல் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்தநிலையில் நேற்று காலையில் முகைதீன் பள்ளித்தெருவில் ஒரு வீட்டின் அருகே நின்ற வேப்பமரம் சாய்ந்து சாலையின் குறுக்கே மின்கம்பி மீதும் மின்கம்பம் மீதும் விழுந்தது. இதில் மின்கம்பம் உடைந்து சேதமானது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் குளச்சல் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். மின் ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து மின்கம்பம் மீது சாய்ந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அத்துடன் உடைந்த மின்கம்பத்தை மின் ஊழியர்கள் மாற்றியமைத்து, மாலையில் மின் வினியோகத்தை சீரமைத்தனர்.
இதுபோல் மாதா காலனியில் தென்னை மரம் சாய்ந்து மின் கம்பம் மீது விழுந்ததில் மின்கம்பம் சேதமடைந்து, மின்தடை ஏற்பட்டது. இந்த 2 சம்பவங்களினால் நேற்று குளச்சல் பகுதியில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.