ரெயில் கட்டண சலுகை மீண்டும் கிடைக்குமா? மூத்த குடிமக்கள் எதிர்பார்ப்பு
Will the rail fare concession be available again? Expectations of senior citizens
மூத்த குடிமக்களின் நலன் மற்றும் வசதிக்காக இந்திய ரெயில்வே வாரியம் 60 வயதை கடந்த ஆண் பயணிகளுக்கு 40 சதவீதமும், 58 வயதை கடந்த பெண் பயணிகளுக்கு 50 சதவீதமும் டிக்கெட் கட்டணத்தில் சலுகை அளித்து வந்தது. இதற்காக ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடியை ரெயில்வே வாரியம் செலவிட்டது.
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் 3 மாதங்கள் ரெயில் சேவை முற்றிலும் முடங்கியதால், இந்த வருவாய் இழப்பை சமாளிக்க மூத்த பயணிகளுக்கான கட்டண சலுகையை ரெயில்வே வாரியம் பறித்துக்கொண்டது. இதற்கு மூத்த குடிமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது
இந்த நிலையில் நாடாளுமன்ற ரெயில்வே நிலைக்குழு கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய அரசிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில், நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்த கட்டண சலுகை ரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் படுக்கை வசதி, 3-ம் வகுப்பு ஏ.சி. வசதி பெட்டியில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு இந்த சலுகையை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் ரத்து செய்யப்பட்ட இந்த கட்டணச் சலுகையை மீண்டும் அளிப்பது பற்றி எந்தவித நடவடிக்கையையும் எடுக்காமல் ரெயில்வே வாரியம் மவுனம் காத்து வருகிறது.
விமானத்தில் தொடரும் சலுகை
பறிக்கப்பட்ட ரெயில் கட்டண சலுகை மீண்டும் எப்போது கிடைக்கும்? என்று முதியோர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதுகுறித்து மூத்த குடிமக்கள் வெளிப்படுத்திய கருத்துகள் வருமாறு:-
தென்னக ரெயில்வே பயணிகள் நலச்சங்க கவுரவ தலைவர் முத்துக்குமரனார் (வயது 65) :- ரெயிலில் முதியோர்களுக்கு வழங்கப்பட்ட கட்டண சலுகையை ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது. ஆனால் விமானத்தில் இந்த சேவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே ரெயில் பயணங்களில் மீண்டும் அவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும். அதேபோல் வெளியூர்களுக்கு செல்வதற்காக முன்பதிவு செய்யும் மூத்த குடிமக்களுக்கும் முன்னுரிமை அளித்து, அவர்களுக்கான டிக்கெட்டை வழங்கி விட்டு, மற்றவர்களுக்கு டிக்கெட் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் ரெயில்வே நிர்வாகம் செய்து தர வேண்டும். முதியோர்களுடன் உடன் செல்லும் நபருக்கும் கட்டண சலுகை வழங்க வேண்டும்.
ஓய்வூதியர்களுக்கு அதிர்ச்சி
கடலூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலு.பச்சையப்பன் (69) :- மத்திய அரசு மூத்த குடிமக்கள் ரெயிலில் பயணம் செய்வதற்கு கட்டண சலுகை அளித்தது. தற்போது அந்த கட்டண சலுகையை ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள ஓய்வூதியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஓய்வூதியம் பெறுபவர்களில் ஒரு சிலர் தான் வருமான வரி கட்டுபவராக இருப்பார்கள். 90 சதவீதம் பேர் ரூ.10 ஆயிரம் மதிப்பூதியம் பெறுபவராக தான் இருக்கிறார்கள். இது தவிர வறுமை கோட்டுக்கு கீழ் ஏராளமான முதியோர்களும் இருக்கிறார்கள். முதியோர்கள் வயோதிகம், நோய், உடல்உபாதை போன்ற காரணங்களால் பெரும்பாலும் ரெயில் பயணத்தையே விரும்புவார்கள். ஆகவே இதை இலவசம் என்று மத்திய அரசு காரணம் காட்டி நிறுத்தாமல், தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
மீண்டும் கொண்டு வரவேண்டும்
மருதூர் மதிவல்லவன் (63):- கொரோனா காலகட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு, கட்டண சலுகையை ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்தது. தற்போது கொரோனா பரவல் முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியும் இதுவரை அந்த கட்டண சலுகையை மீண்டும் கொண்டு வர நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் முதியோர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே ரத்து செய்யப்பட்ட சலுகையை முதியோர்கள் நலன் கருதி மீண்டும் கொண்டு வர வேண்டும்.
கேள்விக்குறி
சிதம்பரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் செல்வநாயகம் (65) :- முதியோர்கள் பெரும்பாலானோர் ரெயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். அதற்கேற்ப அவர்களுக்கு ரெயில்வே நிர்வாகம் கட்டண சலுகை வழங்கியது. இது எங்களை போன்ற முதியோர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. ஆனால் கொரோனாவை காரணம் காட்டி இந்த சலுகையை ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது. ஆனால் தற்போது நிலைமை சீராகி இயல்பு நிலைக்கு திரும்பி, அனைத்து ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் 2 ஆண்டுகளாகியும் இந்த கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்தப்படவில்லை. இதனால் ரெயிலில் பயணம் முதியோர்கள் சிரமத்தை சந்திக்க வேண்டியதுள்ளது. இந்த நிலையை நிர்வாகம் மாற்ற வேண்டும்.
முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் கடினம்
விருத்தாசலம் பட்டியை சேர்ந்த ஞானசேகரன் (65) :- மூத்த குடிமக்களுக்கு ரெயில் சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது பெரும் வேதனை அளிக்கிறது. ரூ.1000 பென்ஷன் வாங்கும் முதியோர்கள், ரெயில் கட்டணம் சலுகைகளால் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக சென்று வந்தனர். ஆனால் இந்த சலுகை ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் பெருநகரங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு செல்வது கடினமாக உள்ளது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் எங்களால் பயணம் செய்ய இயலாது. ஆகவே மீண்டும் ரெயிலில் கட்டண சலுகையை அறிவிக்க வேண்டும். ஏற்கனவே ஆதரவற்றவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு இந்த திட்டம் ஆதரவாக இருந்து வந்தது. மகன்கள் உறவுகள் கைவிட்ட நிலையில் ரெயில்வே நிர்வாகமும் அவர்களை கைவிட்டால் அவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகிவிடும்.
முழு கட்டண சலுகை
புதுக்கூரைப்பேட்டை ஓய்வு பெற்ற அரசு அலுவலர் கந்தசாமி (62) :- ரெயிலில் கட்டண சலுகை இருந்தவரை மூத்த குடிமக்கள் அதிகம் பயணம் செய்து வந்தனர். ஆனால் தற்போது கட்டண சலுகை இல்லாததால் கடும் அவதி அடைகின்றனர். அவர்களுடைய பணம் சேமிப்பும் கரைகிறது. இதனால் ரெயில் பயணத்தையே தவிர்க்கக்கூடிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மூத்த குடிமக்களுக்கு பஸ் பயணம் பாதுகாப்பற்றது. நீரிழிவு நோயாளிகள் நீண்ட தூரம் பஸ்களில் பயணம் செய்ய முடியாது. பெண்கள், நோயாளிகள் ரெயில் பயணத்தையே பாதுகாப்பானதாக உணர்கிறார்கள். அதனால் மூத்த குடி மக்களுக்கு அரசு முழு கட்டண சலுகையை அளிக்க வேண்டும். அரசு மூத்த குடிமக்களுக்கு ஆதரவு அளித்தால் தான் அவர்களால் நீண்ட காலம் நோய் நொடியின்றி வாழ முடியும்.
பச்சை கொடி காட்டுமா?
தமிழகத்தில் நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து துறையே தாராள மனதுடன் பெண்களுக்கு இலவச பயண சலுகை, முதியோர்களுக்கு கட்டண சலுகை வழங்கி வருகிறது. ஆனால் லாபத்தில் இயங்கும் ரெயில்வே துறை ஏற்கனவே வழங்கி வந்த சலுகையை பறித்து நிறுத்தி வைத்திருப்பது ஏற்புடையது அல்ல.
எனவே ரெயில்வே நிர்வாகம் சிவப்பு கொடி காட்டி நிறுத்திவைத்திருக்கும் கட்டணச் சலுகைக்கு விரைவில் பச்சை கொடி காட்ட வேண்டும் என்பதே மூத்த பயணிகளின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் இருக்கிறது.