ரெயில் கட்டணச் சலுகை மீண்டும் கிடைக்குமா?; மூத்த குடிமக்கள் எதிர்பார்ப்பு


ரெயில் கட்டணச் சலுகை மீண்டும் கிடைக்குமா?; மூத்த குடிமக்கள் எதிர்பார்ப்பு
x

Comments

திண்டுக்கல்

ரெயில்களில் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் முதியோர் கட்டண சலுகை எப்போது மீண்டும் கிடைக்கும் என்று மூத்த குடிமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கொரோனாவால் பறிப்பு

மூத்த குடிமக்களின் நலன் மற்றும் வசதிக்காக இந்திய ரெயில்வே வாரியம் 60 வயதை கடந்த ஆண் பயணிகளுக்கு 40 சதவீதமும், 58 வயதை கடந்த பெண் பயணிகளுக்கு 50 சதவீதமும் டிக்கெட் கட்டணத்தில் சலுகை அளித்து வந்தது. இதற்காக ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடியை ரெயில்வே வாரியம் செலவிட்டது.

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் 3 மாதங்கள் ரெயில் சேவை முற்றிலும் முடங்கியதால், இந்த வருவாய் இழப்பை சமாளிக்க மூத்த பயணிகளுக்கான கட்டண சலுகையை ரெயில்வே வாரியம் பறித்துக்கொண்டது.

இதற்கு மூத்த குடிமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது

இந்த நிலையில் நாடாளுமன்ற ரெயில்வே நிலைக்குழு கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய அரசிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில், நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்த கட்டண சலுகை ரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் படுக்கை வசதி, 3-ம் வகுப்பு ஏ.சி. வசதி பெட்டியில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு இந்த சலுகையை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.எனினும் ரத்து செய்யப்பட்ட இந்த கட்டணச் சலுகையை மீண்டும் அளிப்பது பற்றி எந்தவித நடவடிக்கையையும் எடுக்காமல் ரெயில்வே வாரியம் மவுனம் காத்து வருகிறது.

மீண்டும் கட்டண சலுகை

பறிக்கப்பட்ட ரெயில் கட்டண சலுகை மீண்டும் எப்போது கிடைக்கும்? என்று முதியோர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதுகுறித்து திண்டுக்கல்ைல சேர்ந்த மூத்த குடிமக்கள் வெளிப்படுத்திய கருத்துகள் வருமாறு:-

சுந்தரம் (ஜோத்தாம்பட்டி):- பஸ், கார்களில் பயணம் செய்தால் உடல்ரீதியாக பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி கழிப்பறையை பயன்படுத்த வேண்டியது ஏற்படும். இதற்கு ரெயில் பயணம் வசதியாக இருக்கிறது. மேலும் வயதான காலத்தில் காசி, ராமேசுவரம் உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு செல்ல ரெயில் தான் வசதியாக இருக்கிறது. இதற்காக முதியவர்களுக்கு முன்பு கட்டண சலுகை வழங்கப்பட்டது. அது ஏராளமான முதியோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கொரோனா காலத்தில் அதை ரத்து செய்ததால் சிரமமாக இருக்கிறது. எனவே மீண்டும் கட்டண சலுகை வழங்க வேண்டும். குளிர்சாதன பெட்டி, முன்பதிவு பெட்டி, முன்பதிவு இல்லாத பெட்டி என அனைத்திலும் சலுகை வழங்க வேண்டும். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க பலர் ஆர்வமாக உள்ளனர். இந்த நேரத்தில் கட்டண சலுகை கிடைத்தால் நன்றாக இருக்கும்.

வேல்மணி (திண்டுக்கல்):- முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்க கட்டணம் குறைவு தான். ஆனால் நீண்டதூரம் செல்லும் போது முதுமை காரணமாக அதில் பயணம் செய்ய முடியவில்லை. எனவே முன்பதிவு பெட்டிகளில் தான் பயணிக்க வேண்டியது இருக்கிறது. கொரோனாவால் வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்கு கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது. ஆனால் நிலைமை சீராகி வருவாய் அதிகரித்த பின்னரும் கட்டண சலுகை வழங்காதது ஏமாற்றமாக இருக்கிறது. எனவே ரெயில்களில் மீண்டும் கட்டண சலுகையை வழங்க வேண்டும்.

லாபம் ஈட்டும் துறை

தேவதாஸ் (பழனி):- முதியவர்கள் வௌியூர் செல்வதற்கு ரெயில் பயணம் தான் மிகவும் ஏற்றது. மூத்த குடிமக்கள் என்ற வகையில் ரெயிலில் கட்டண சலுகை வழங்கப்பட்டது. இதனால் வசதி படைத்தவர்கள் மட்டுமின்றி சாதாரண மக்களும் ரெயிலில் எளிதாக சென்று வரமுடிந்தது. இந்த நிலையில் கொரோனா காலத்தில் ரெயில்கள் நிறுத்தப்பட்ட போது சலுகையும் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஏராளமான முதியவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மீண்டும் ரெயிலில் கட்டண சலுகை வழங்க வேண்டும்.

பச்சைமுத்து (பழனி ரெயில் பயணிகள் நலசங்க செயலாளர்):- ரெயில்வே துறை அதிக லாபம் ஈட்டும் துறையாக இருக்கிறது. அதற்கு பொதுமக்கள் கட்டணமாக செலுத்தும் தொகையே காரணம். அதை மூத்த குடிமக்களுக்கு பயன்படும் வகையில் சலுகை வழங்கப்பட்து. மதுரை, கோவை, சென்னை போன்ற ஊர்களுக்கு சிகிச்சைக்கு செல்லும் முதியவர்கள், ஆன்மிக சுற்றுலா செல்பவர்கள், வெளியூர்களில் வசிக்கும் குடும்பத்தினரை பார்க்க செல்பவர்களுக்கு பெரிதும் பயன்பட்டு வந்தது. கட்டண சலுகையை நிறுத்தியதால் பலரும் சிரமப்படுகின்றனர். எனவே முதியோருக்கு மீண்டும் சலுகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story