அனைத்து கிராம பகுதிகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்-கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தகவல்
காவிரி கூட்டு குடிநீர் திட்ட 2-ம் கட்ட பணிகள் மூலம் அனைத்து கிராம பகுதிகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று சக்கரக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.
காவிரி கூட்டு குடிநீர் திட்ட 2-ம் கட்ட பணிகள் மூலம் அனைத்து கிராம பகுதிகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று சக்கரக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.
சிறப்பு கிராம சபை கூட்டம்
ராமநாதபுரம் யூனியன் சக்கரக்கோட்டை ஊராட்சி காரிக்கூட்டம் கிராமத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் மூலம் ஜல்ஜீவன் மிஷன் குடிநீர் திட்ட பணி குறித்த சிறப்பு கிராமசபை கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், பயிற்சி உதவி கலெக்டர் நாராயண சர்மா, ஊராட்சி உதவி இயக்குனர் பரமசிவம், சக்கரக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் யாழினி புஷ்பவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பேசியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் குடிநீருக்கான தேவை அதிகமாக உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு என தனியாக கரூர் மாவட்டம், நஞ்சை புகலூர் காவிரி ஆற்றுப்பகுதியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் வழங்க சிறப்பு திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் வழங்கி உள்ளார்.
அதற்கான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு
அதேபோல ஏற்கனவே காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வழங்கப்பட்டு வரும் நிலையில் அதற்கான குழாய் இணைப்புகளை புதுப்பித்து மாற்றி அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
முதல்-அமைச்சர் உத்தரவின்படி காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் 2-ம் கட்ட பணியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு என தனியாக குடிநீர் குழாய் இணைப்புகள் கொண்டு வந்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில் திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் குடிநீர் தேவை முழுமையாக நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழிப்புணர்வு கையேடு
இதை தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பில் வங்கி வாடிக்கையாளர்களுக்கான விழிப்புணர்வு கையேட்டை கலெக்டர் வெளியிட்டார்.
இந்த கூட்டத்தில் ராமநாதபுரம் யூனியன் ஆணையாளர்கள் ரமேஷ், சேவுகபெருமாள், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.