ரெயில் கட்டணச் சலுகை மீண்டும் கிடைக்குமா?
Will the rail fare concession be available again?
ரெயில்களில் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் முதியோர் கட்டண சலுகை எப்போது மீண்டும் கிடைக்கும் என்று மூத்த குடிமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கொரோனாவால் பறிப்பு
மூத்த குடிமக்களின் நலன் மற்றும் வசதிக்காக இந்திய ரெயில்வே வாரியம் 60 வயதை கடந்த ஆண் பயணிகளுக்கு 40 சதவீதமும், 58 வயதை கடந்த பெண் பயணிகளுக்கு 50 சதவீதமும் டிக்கெட் கட்டணத்தில் சலுகை அளித்து வந்தது. இதற்காக ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடியை ரெயில்வே வாரியம் செலவிட்டது.
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் 3 மாதங்கள் ரெயில் சேவை முற்றிலும் முடங்கியதால், இந்த வருவாய் இழப்பை சமாளிக்க மூத்த பயணிகளுக்கான கட்டண சலுகையை ரெயில்வே வாரியம் பறித்துக்கொண்டது.இதற்கு மூத்த குடிமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது
இந்த நிலையில் நாடாளுமன்ற ரெயில்வே நிலைக்குழு கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய அரசிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில், நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்த கட்டண சலுகை ரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் படுக்கை வசதி, 3-ம் வகுப்பு ஏ.சி. வசதி பெட்டியில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு இந்த சலுகையை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் ரத்து செய்யப்பட்ட இந்த கட்டணச் சலுகையை மீண்டும் அளிப்பது பற்றி எந்தவித நடவடிக்கையையும் எடுக்காமல் ரெயில்வே வாரியம் மவுனம் காத்து வருகிறது.
மீண்டும் வழங்க வேண்டும்
பறிக்கப்பட்ட ரெயில் கட்டண சலுகை மீண்டும் எப்போது கிடைக்கும்? என்று முதியோர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதுகுறித்து மூத்த குடிமக்கள் வெளிப்படுத்திய கருத்துகள் வருமாறு:-
அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்க தலைவர் நைனா மாசிலாமணி:- மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் சலுகையை அரசு மீண்டும் வழங்க வேண்டும். நம் நாடு பல துறைகளில் முன்னேற்றம் அடைவதற்கு அவர்களின் உழைப்பு காரணமாக இருந்துள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் மூத்த குடிமக்களுக்கு உணவு, போக்குவரத்து, மருத்துவம் போன்றவைகளை அரசே செய்து தருகிறது. டிக்கெட் சலுகையை பொருளாதாரம் குறைவாக இருக்கும் முதியவர்களும் பயன் பெறுவதற்காக மீண்டும் டிக்கெட் சலுகையை வழங்க வேண்டும்.
திருப்பத்துரை சேர்ந்த ராமானுஜம்:-மூத்த குடிமக்களான பெண்களுக்கு ரெயில் கட்டணத்தில் 50 சதவீத கட்டண சலுகையும், ஆண்களுக்கு 40 சதவீத கட்டண சலுகையும் வழங்கி வந்தது. கொரோனா தொற்றுக்கு பின்னர் ரெயில்வே நிர்வாகம் இதனை ரத்து செய்துவிட்டது. இதனால் ெரயிலில் பயணம் செய்ய மூத்த குடிமக்கள் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். தற்போது விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் கஷ்டப்படும் மூத்த குடிமக்கள் வெளியூர் செல்வதற்கு ெரயில் பயணத்தையே விரும்புகின்றனர். மூத்த குடிமக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு ெரயிலில் பயணம் செய்வதற்கு, முன்பு இருந்தது போல் சலுகை கட்டணத்தை வழங்க வேண்டும். தற்போது ெரயிலில் பயணம் செய்ய மூத்த குடிமக்கள் முன்பதிவு செய்யும்போது லோ பெர்த் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனுடன் ரெயில் கட்டண சலுகை வழங்கினால் மூத்த குடிமக்கள் மகிழ்ச்சியாக தங்களது பயணத்தை மேற்கொள்ள வசதியாக இருக்கும்.
ஆன்மிக பயணம்
திருவண்ணாமலையை சேர்ந்த முருகன்:- ஏழை, எளிய மக்களுக்கு ரெயில் சேவை மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. பஸ்களில் செல்ல வேண்டும் என்றால் அதிகப்படியான கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் ரெயிலில் குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடிகிறது. முதியவர்களுக்கு கொரோனா காலக்கட்டத்திற்கு முன்பு பல சலுகைகள் அளிக்கப்பட்டு வந்தன. தற்போது அந்த சலுகைகள் இல்லாததால் முதியவர்கள் பலர் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். மேலும் ரெயில் பாஸ் போன்றவையும் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளதாக தெரிகிறது. இதேபோன்று நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் ரெயில்வே துறை கொண்டு வர வேண்டும்.
வந்தவாசியை சேர்ந்த எஸ்.ஏ.ஜி.துரை:- நாங்கள் ஆன்மிக தலங்களுக்கு செல்லவும், மருத்துவ சிகிச்சைக்கு சென்று வரவும் மூத்த குடிமக்களுக்கு இந்த கட்டண சலுகை பேருதவியாக இருப்பதால், இதை மீண்டும் வழங்க வேண்டும். ஆனால், இந்த கட்டண சலுகையால் ெரயில்வே துறைக்கு இழப்பு ஏற்படுகிறது. எனவே, கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படாது என்று ெரயில்வே அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தற்போது, கொரோனா முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், கட்டண சலுகை இல்லாத காரணத்தால், நாங்கள் பயணம் செய்வது கடினமாக உள்ளது. எனவே, மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். மூத்த குடிமக்கள் ெரயில்களில் இலவசமாக பயணம் செய்வதற்கு உதவ வேண்டும்.
பரிசீலனை செய்ய வேண்டும்
ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன்:- நான் ரெயில்களில் மூத்த குடிமக்கள் பிரிவில் அடிக்கடி பயணம் செய்து வருகிறேன். கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து ரெயில்களும் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் மூத்த குடிமக்களுக்கு நிறுத்தப்பட்ட கட்டண சலுகை மட்டும் வழங்கப்பட வில்லை. நிறுத்தப்பட்ட கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்.
வேலூரை சேர்ந்த உதவும் உள்ளங்கள் தலைவர் சந்திரசேகர்:-
ரெயிலில் பயணம் செய்ய மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை சுமார் 20 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தது. இந்த கட்டண சலுகையை ரத்து செய்தது தவறான முடிவாகும். மூத்த குடிமக்களுக்கு சலுகை வழங்குவதால் நிதி நெருக்கடி ஏற்படுகிறது. அதனால் மூத்த குடிமக்கள் சலுகைகளை விட்டு கொடுக்க வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த கருத்து சரியானது அல்ல. சுமார் 30, 40 ஆண்டுகளாக உழைத்து இந்த நாட்டிற்கு பல்வேறு வகையில் வரி செலுத்தியவர்கள் தான் தற்போது மூத்த குடிமக்களாக உள்ளனர். எனவே அவர்கள் ரெயிலில் பயணம் செய்யும்போது கட்டண சலுகை வழங்குவது ஏற்புடையது தான். மத்திய அரசு இதனை பரிசீலனை செய்து மீண்டும் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை வழங்க வேண்டும். ரெயில்களில் ஏழை, எளிய மக்கள் தான் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்கிறார்கள். எனவே அந்த பெட்டிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றார்.
லட்சக்கணக்கானோர் பயனடைவார்கள்
அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியை சேர்ந்த துரை:- மூத்த குடிமக்களுக்கு ரெயில் கட்டணத்தில் சலுகை பெறும்போது மட்டும் ஏன் அரசு சுமையாக பார்க்கிறது. மூத்த குடிமக்கள் பலர் பெற்ற பிள்ளைகளையும், உறவினகர்களையும் எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலையிலேயே உள்ளனர். ஓய்வூதியமோ, போதிய வருமானமோ இல்லாமல் வயதான காலத்திலும் தினசரி கூலி வேலை செய்து வரும் எங்களை போன்றவர்கள் பயனடையும் வகையில் ரெயில் டிக்கெட் சலுகையை அரசு மீண்டும் வழங்க வேண்டும்.
காட்பாடியை சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் ஆர்.ரவிபாபு:- மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை உள்பட பல்வேறு சலுகைகளை ரெயில்வே துறை வழங்கியது. இந்த சலுகைகளை மூத்தகுடி மக்களுக்கு வழங்கப்பட்ட மரியாதையாக தான் நான் பார்க்கிறேன். கொரோனா காலத்தில் இந்த சலுகைகள் நிறுத்தப்பட்டன. இதனால் மூத்த குடிமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். கொரோனா காலம் முடிந்து சகஜ நிலைமைக்கு திரும்பிய பின்பும் சலுகைகளை இன்னும் ரெயில்வே துறை மூத்த குடிமக்களுக்கு வழங்கவில்லை. ஏற்கனவே மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை மீண்டும் ரெயில்வே துறை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் லட்சக்கணக்கான மூத்த குடிமக்கள் பயனடைவார்கள்.
பச்சை கொடி காட்டுமா?
தமிழகத்தில் நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து துறையே தாராள மனதுடன் பெண்களுக்கு இலவச பயண சலுகை, முதியோர்களுக்கு கட்டண சலுகை வழங்கி வருகிறது. ஆனால் லாபத்தில் இயங்கும் ரெயில்வே துறை ஏற்கனவே வழங்கி வந்த சலுகையை பறித்து நிறுத்தி வைத்திருப்பது ஏற்புடையது அல்ல.
எனவே ரெயில்வே நிர்வாகம் சிவப்பு கொடி காட்டி நிறுத்திவைத்திருக்கும் கட்டணச் சலுகைக்கு விரைவில் பச்சை கொடி காட்ட வேண்டும் என்பதே மூத்த பயணிகளின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் இருக்கிறது.