திருமணத்திற்கு காதலன் சம்மதிக்காததால் 2 குழந்தைகளின் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை
ஊட்டி
திருமணத்திற்கு காதலன் சம்மதிக்காததால் 2 குழந்தைகளின் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
கணவரை பிரிந்த இளம்பெண்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியை சேர்ந்தவர் தீபா (வயது 28). இவர் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் அவர்களுக்கு 5-ம் வகுப்பு படிக்கும் ஒரு ஆண் குழந்தையும், 4-ம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இதற்கிடையே குடும்பத்தில் தீபாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தகராறு முற்றியது. அவரது கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தொடர் சண்டை காரணமாக கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தீபாவின் கணவர் அவரை பிரிந்து சென்று விட்டார்.
இதைத் தொடர்ந்து தீபா குழந்தைகளை தனது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு 3 மாதங்களுக்கு முன்பு கேத்திக்கு வந்து விட்டார்.
வாலிபருடன் பழக்கம்
இதைத்தொடர்ந்து கேத்தி அடுத்த கொல்லிமலையை சேர்ந்த செல்வகுமார் (32) என்பவருடன் தீபாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் செல்வகுமாரும் தீபாவும் தனியாக வீடு எடுத்து தங்கினர். எனவே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு செல்வகுமாரிடம் தீபா நீண்ட நாட்களாக கேட்டு வந்துள்ளார். அதற்கு செல்வகுமார் எனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளது. ஆனால் என் மீது ஒரு வழக்கு உள்ளது, வழக்கு முடிந்த பின்னர் திருமணம் செய்து கொள்கிறேன் என்று காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
எனவே திருமணம் செய்து கொள்ள அவர் மறுக்கிறார் என்ற கோபத்தில் தீபா, செல்வக்குமாரிடம் இருந்து கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.
இதன் பின்னர் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. தீபா மாயமானதால் ஏமாற்றமடைந்த செல்வகுமார் விஷம் குடித்து சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த நிலையில் மாயமான தீபா கேத்தி பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.