வெவ்வேறு விபத்துகளில் 2 பெண்கள் சாவு
ஓசூர், சூளகிரியில் வெவ்வேறு விபத்துகளில் 2 பெண்கள் இறந்தனர்.
ஓசூர்
ஓசூர், சூளகிரியில் வெவ்வேறு விபத்துகளில் 2 பெண்கள் இறந்தனர்.
லாரி-ஆட்டோ மோதல்
கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரடிகெரே அருகே உள்ள பில்லகஅள்ளியை சேர்ந்தவர் நயாஸ் பாஷா. இவரது மனைவி நசிமா (வயது27). நேற்று முன்தினம் இவர்கள் ஓசூர் சப்படி அருகில் சென்று சரக்கு ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தனர். ஆட்டோவை நயாஸ் பாஷா ஓட்டி சென்றார். அப்போது முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது ஆட்டோ மோதியது.
இந்த விபத்தில் சரக்கு ஆட்டோ நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கி நசிமா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். நயாஸ் பாஷா படுகாயமடைந்தார். அவர் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண் பலி
ஓசூர் ஜூஜூவாடியை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி நித்யா (35). இவர் பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மாநில எல்லையில் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நித்யா சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.