மேலூர் அருகே துணிகரம்: வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு கொள்ளையடித்த இளம் பெண்கள்- திருமண அழைப்பிதழ் கொடுப்பதாக வந்து 17 பவுன்-ரூ.70 ஆயிரத்துடன் ஓட்டம்


மேலூர் அருகே துணிகரம்: வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு கொள்ளையடித்த இளம் பெண்கள்- திருமண அழைப்பிதழ் கொடுப்பதாக வந்து 17 பவுன்-ரூ.70 ஆயிரத்துடன் ஓட்டம்
x
தினத்தந்தி 16 Nov 2022 12:14 AM IST (Updated: 16 Nov 2022 6:04 PM IST)
t-max-icont-min-icon

திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் வந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு நகை-பணத்தை கொள்ளையடித்த 2 இளம்பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மதுரை

மேலூர்,

திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் வந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு நகை-பணத்தை கொள்ளையடித்த 2 இளம்பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருந்த பெண்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் கத்தார் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ேஹமலதா(வயது 42). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

மதுரையில் உள்ள விடுதியில் தங்கி மகன் படித்து வருகிறார். ஹேமலதா அவரது மகளுடன் கீழவளவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் ஹேமலதாவின் மகள் அருகில் உள்ள வீட்டுக்கு டியூசன் எடுக்க சென்றிருந்தார். ஹேமலதா வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்டு அறிந்து, 40 வயது ஆண் மற்றும் 20 வயதுடைய 2 இளம்பெண்கள் அவரது வீட்டுக்கு வந்தனர்.

கயிற்றில் கட்டி போட்டனர்

ஹேமலதாவிடம், கத்தார் நாட்டில் உங்கள் கணவர் பணிபுரியும் நிறுவனத்தில் நான் வேலை பார்க்கிறேன் என்று அந்த ஆண் கூறியதுடன், தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க வந்தேன் என தெரிவித்துள்ளார்.

அதனை நம்பி ஹேமலதா, 3 பேரையும் வீட்டுக்குள் அழைத்து உபசரித்தார். அப்போது அந்த இளம்பெண்கள் உள்பட 3 பேரும் திடீரென ஹேமலதாவை சரமாரியாக தாக்கி கயிற்றால் கட்டிப்போட்டனர்.

பின்பு அவரது வாயில் பிளாஸ்திரியை ஒட்டி கத்தியை காட்டி மிரட்டி பீரோ சாவியை பறித்தனர். பீரோவை திறந்து அதில் இருந்த 17 பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கம், ஹேமலதாவின் செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

பரபரப்பு

டியூசன் எடுக்க சென்ற ஹேமலதாவின் மகள், வீட்டுக்கு வந்து கதவை நீண்ட நேரம் தட்டியும் தாயார் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து அருகில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். ஜன்னல் வழியாக பார்த்த போது, ேஹமலதாவை கட்டி போட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கீழவளவு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆர்லியாஸ் ரொபோனி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து ஹேமலதாவை மீட்டு விசாரணை நடத்தினர். திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் வந்து பெண்ணை கட்டிப்போட்டு நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, தப்பிச்சென்ற இளம்பெண்கள் உள்பட 3 பேரை தேடிவருகின்றனர்.


Next Story