25 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய் நிரம்பியது
கண்மாய் சிங்கம்புணரி அருகே 25 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய் நிரம்பியது. அப்போது மலர் தூவி விவசாயிகள் வழிபட்டனர்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே 25 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய் நிரம்பியது. அப்போது மலர் தூவி விவசாயிகள் வழிபட்டனர்.
புதுக்கண்மாய்
சிங்கம்புணரி ஒன்றியத்துக்குட்பட்ட ம.கோவில்பட்டி அருகே பட்ட கோவில் களம் பகுதியை ஒட்டி புதுக்கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் நீரை நம்பி சுமார் 200 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. இக்கண்மாய்க்கு வருகின்ற பாலாற்று தண்ணீர் வரத்து கால்வாய் இருந்தும் அவை அனைத்தும் உடைந்து பயனில்லாமல் இருந்ததால் ஒவ்வொரு முறையும் பாலாற்றில் வருகின்ற தண்ணீர் புதுக்கண்மாய்க்கு முழுமையாக சென்றடைவதில்லை. இதனால் இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக போதுமான விவசாய பணிகள் நடைபெறாமல் இருந்தன.
இதையடுத்து சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து புதுக்கண்மாய் வரத்து கால்வாய் அனைத்தையும் தங்களது சொந்த செலவில் சீரமைத்தனர்.
மலர் தூவி வழிபாடு
இதன் காரணமாக தற்போது பெய்த தொடர் மழையால் பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி புதுக்கண்மாய்க்கு வந்தது. இதனால் சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது புதுக்கண்மாய் நிரம்பி காட்சியளிக்கிறது. நேற்று மாலை புதுக்கண்மாய் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் மறுகால் பாய்ந்தது. இதையடுத்து அப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும் மறுகால் பாய்ந்த தண்ணீரில் மலர் தூவி வழிபட்டனர். இந்த பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் வருடத்திற்கு இரண்டு முறை வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.