மாணவிகள் புத்தகம் சுமந்த விவகாரம்: அரசு பள்ளி ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்


மாணவிகள் புத்தகம் சுமந்த விவகாரம்: அரசு பள்ளி ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்
x

அரசு பள்ளி மாணவிகள் புத்தகம் சுமந்த விவகாரம் தொடர்பாக அரசு பள்ளி ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

ராமநாதபுரம்

அரசு பள்ளி மாணவிகள் புத்தகம் சுமந்த விவகாரம் தொடர்பாக அரசு பள்ளி ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

சர்ச்சை

ராமநாதபுரத்தில் இருந்து இந்த கல்வி ஆண்டிற்கான பாடபுத்தகங்கள் ராமேசுவரத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு புத்தக பண்டல்களை இறக்கி வைக்க ஆட்கள் இல்லை. இதனையடுத்து புத்தகங்களை எடுத்துச்செல்ல மாணவிகளை பயன்படுத்தினர். இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இதுகுறித்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவின்பேரில் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மண்டபம் கல்வி மாவட்ட அலுவலர் முருகம்மாளிடம் விசாரணை நடத்தினார்.

இதன் தொடர்ச்சியாக பாடப்புத்தகங்களை பள்ளிகளுக்கு எடுத்து செல்லும் பணிக்கு நியமிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர்கள் பெருங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி சண்முகசுந்தரம், வாலாந்தரவை அரசு உயர்நிலைப்பள்ளி சே.கார்த்திகேயன், இருமேனி அரசு உயர்நிலைப்பள்ளி ப.கார்த்திகேயன், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி இரவு காவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்து உள்ளார்.

நோட்டீஸ்

மேலும் அரசு உத்தரவின்படி பள்ளிகள் திறக்கும் முன்பே பாடபுத்தகங்களை அனுப்பி வைக்க உத்தரவிட்டும் பள்ளிகள் திறந்த பின்னர் தாமதமாக புத்தகங்களை அனுப்பியது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் முருகம்மாள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், சம்பந்தப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளியின் செயலர், தலைமை ஆசிரியர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டு உள்ளார்.

இந்த விவகாரம் பள்ளி அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story