குமரி மாவட்டத்தில் விடிய, விடிய மழை: மயிலாடியில் 52.4 மி.மீ. பதிவு


குமரி மாவட்டத்தில் விடிய, விடிய மழை:  மயிலாடியில் 52.4 மி.மீ. பதிவு
x

52.4 mm in Mailadi. Rainfall

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் விடிய, விடிய மழை பெய்த நிலையில் மயிலாடியில் 52.4 மி.மீ. மழை பதிவானது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1,003 கன அடி தண்ணீர் வருகிறது.

விடிய, விடிய மழை

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த மழை குமரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நாகர்கோவில் உள்பட மாவட்டப்பகுதிகளில் வெயில் காணப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய, விடிய மழை பெய்து கொண்டிருந்தது. இந்த மழை காலை 6 மணி வரை தொடர்ந்தது.

இதனால் நாகர்கோவில் நகரின் முக்கிய சாலைகளான கேப் ரோடு, கே.பி.ரோடு, எம்.எஸ்.ரோடு, இந்துக்கல்லூரி ரோடு, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி ரோடு, வடசேரி ரோடு, செம்மாங்குடி ரோடு, மீனாட்சிபுரம், பார்வதிபுரம் மேம்பாலப் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. காலை 6 மணிக்குப்பிறகு மழை இல்லை. ஆனால் வானம் மப்பும், மந்தாரமுமாக காட்சி அளித்தது. இடையிடையே லேசான தூரல் மழையும் பெய்தது.

மழை அளவு

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மயிலாடியில் அதிகபட்சமாக 52.4 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

பேச்சிப்பாறை அணை- 23.6, பெருஞ்சாணி அணை- 14.8, சிற்றார்-1 அணை- 15.2, சிற்றார்-2 33.6, புத்தன் அணை- 13.2, மாம்பழத்துறையாறு அணை- 25, முக்கடல் அணை- 11, பூதப்பாண்டி- 15.2, களியல்- 14.8, கன்னிமார்- 12.4, கொட்டாரம்- 48.4, குழித்துறை- 7, நாகர்கோவில்- 40.4, சுருளக்கோடு- 15.2, தக்கலை- 13.3, குளச்சல்- 12.8, இரணியல்- 22.4, பாலமோர்- 22.4, திற்பரப்பு- 15.2, ஆரல்வாய்மொழி- 9.2, கோழிப்போர்விளை- 17.4, அடையாமடை- 27, குருந்தன்கோடு-10, முள்ளங்கினாவிளை- 12.6, ஆனைக்கிடங்கு- 23 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

வீடு இடிந்து சேதம்

இந்த மழையின் காரணமாக நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1,003 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 233 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 41.87 அடியாக உள்ளது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 386 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 69.76 அடியாக உள்ளது. சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 239 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 14.89 அடியாக உள்ளது.

மழையால் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் ஒரு வீடு இடிந்து சேதம் அடைந்துள்ளது.


Next Story