ரூ.1 கோடியே 37 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்
சீர்காழி அருகே புங்கனூர், சட்டநாதபுரம் ஊராட்சிகளில் ரூ. 1 கோடியே 37 லட்சத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்
சீர்காழி:
சீர்காழி அருகே புங்கனூர், சட்டநாதபுரம் ஊராட்சிகளில் ரூ. 1 கோடியே 37 லட்சத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்
கலெக்டர் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புங்கனூர் ஊராட்சியில் ரூ. 27 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமையல் கூடம், ரூ. 39 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் கிராம பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் உள்ளிட்ட கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் பணிகளை தரமாகவும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சூரக்காடு அரசு தொடக்கப் பள்ளியில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வரும் வகுப்பறை கட்டிடத்தையும், இதேபோல் ரூ.17 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பீட்டில் வடக்குவெளி கிராமத்திற்கு அமைக்கப்பட்ட தார் சாலை, சட்டநாதபுரம் நடுநிலை பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட சுற்றுச்சுவர் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அங்கன்வாடி மையம்
பின்னர் பள்ளி வளாகத்தில் இருந்த அங்கன்வாடிக்கு சென்று மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார் அப்பொழுது குழந்தைகளிடம் கொழுக்கட்டை வழங்கப்படுகிறதா எனவும் மேலும் குழந்தைகளுக்கு தயார் செய்யப்பட்ட கலவை சாதம் மற்றும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் மகாலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன், சரவணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜுனைதா பேகம் கமாலுதீன், தட்சிணாமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் விசாகர், ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.