ரூ.1 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள்
கொடைக்கானல் பகுதியில் ரூ.1 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெறுகிறது என்று ஒன்றியக்குழு தலைவர் தெரிவித்தார்.
கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், அதன் தலைவர் சுவேதாராணி கணேசன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சாலை, குடிநீர், போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
கவுன்சிலர்கள் விடுத்த கோரிக்கைக்கு பதில் அளித்து ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 15 கிராம ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியில் 29 வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெறுகிறது. இதில் 15 பணிகள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள பணிகள் விரைவில் நிறைவேற்றப்படும். 15-வது நிதிக்குழு நிதியின் மூலம் குடிநீர், சுகாதாரம் மற்றும் இதர பணிகள் செய்வதற்காக மாவட்ட கலெக்டரிடம் நிர்வாக அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் விரைவில் அந்த பணிகள் தொடங்கப்படும். ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 11 பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மாநில அரசு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சம் செலவில் கூக்கால் கிராமத்தில் இருந்து பழம்புத்தூர் வரை தார்சாலை அமைக்கப்பட்டு வருகிறது என்றார்.
இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்பட உள்ளாட்சி அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மதிப்பூதியம் வழங்கியதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானசேகர் வரவேற்றார். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கிருஷ்ணன் நன்றி கூறினார்.