கொடைக்கானல் மலையில் 'இரிடியம்' இருப்பதாக கூறி ரூ.1½ கோடி மோசடி


கொடைக்கானல் மலையில் இரிடியம் இருப்பதாக கூறி ரூ.1½ கோடி மோசடி
x

கொடைக்கானல் மலையில் ‘இரிடியம்' இருப்பதாக கூறி ரூ.1½ கோடி மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சின்னசாமி (வயது 60) என்பவர் புகார் மனு அளித்திருந்தார். அதில், 'கோபிச்செட்டிப்பாளையத்தை சேர்ந்த எனது உறவினர் கமலக்கண்ணன் (வயது 51), அவரது நண்பர்கள் சுதாகர் (46), பிரபாகரன் (42) ஆகியோர் கொடைக்கானல் மலையில் 'இரிடியம்' எனும் உலோக பொருள் இருப்பதாகவும், இதை வாங்குவதற்கு வெளிநாட்டு வியாபாரிகள் தயாராக இருப்பதாகவும் கூறினார்கள். இதனை விற்பனை செய்ய பணம் முதலீடு செய்தால் கிடைக்கும் லாபத்தில் ரூ.250 கோடி தருவதாக சொன்னார்கள். இதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியது போன்ற சான்றிதழ்களையும் காண்பித்தார்கள். இதனால் நானும் உண்மை என்று நம்பி ரொக்கமாகவும், வங்கி பரிவர்த்தனைகள் மூலமாகவும் பல தவணைகளாக அவர்களுக்கு ரூ.1.43 கோடி பணம் கொடுத்தேன்.

ஆனால் அவர்கள் என்னிடம் காண்பித்தது போலி ஆணை என்பதும், எனது பணத்தை மோசடி செய்துவிட்டனர் என்பதும் பின்னர் தெரியவந்தது. அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும்' என்று கூறியிருந்தார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரும் தலைமறைவாகினார்கள்.

3 பேர் கைது

இந்த நிலையில் தலைமறைவாக உள்ள அவர்களை கைது செய்வதற்கு சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் நிஷா மேற்பார்வையில் உதவி கமிஷனர் ஜான் விக்டர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் துரைராஜ் உள்பட போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் கோபிச்செட்டிபாளையம் வேலுமணி நகர் 3-வது தெருவை சேர்ந்த கமலகண்ணன், நாகர்பாளையம் சாலை வி.ஜ.பி. முத்துநகரை சேர்ந்த பிரபாகரன், புதுப்பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த சுதாகர் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story