காரில் சென்ற நகைக்கடை அதிபரை வழிமறித்து ரூ.1½ கோடி கொள்ளை


காரில் சென்ற நகைக்கடை அதிபரை வழிமறித்து ரூ.1½ கோடி கொள்ளை
x

காரில் சென்ற நகைக்கடை அதிபர் மீது மிளகாய்ப்பொடி தூவி தாக்கி ரூ.1½ கோடியை 2 கார்களில் வந்த முகமூடி கும்பல் கொள்ளையடித்து சென்றது.

நாங்குநேரி,

நெல்லை டவுனை சேர்ந்தவர் சுஷாந்த் (வயது 40). இவர் நெல்லையில் நகைக்கடை மற்றும் ஷாப்பிங் பொருட்கள் மொத்த வியாபாரம் நடத்தி வருகிறார்.

சுஷாந்த் நேற்று காலையில் நகைகள் வாங்குவதற்காக கேரள மாநிலம் நெய்யாற்றங்கரைக்கு தனது காரில் புறப்பட்டார்.

மிளகாய் பொடி தூவினர்

நெல்லை அருகே மூன்றடைப்பு ரெயில்வே மேம்பாலத்தில் சென்றபோது திடீரென 2 கார்களில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் சுஷாந்த் காரை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் கார் கண்ணாடியை இரும்பு கம்பியால் உடைத்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுஷாந்த் சுதாரிப்பதற்குள் அவர் மீது மிளகாய் பொடியை தூவி தாக்கினர்.

பின்னர் காரில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் அந்த வழியாக வாகனங்கள் வந்ததால் முகமூடி கும்பல், சுஷாந்தை தாங்கள் வந்த காரில் தூக்கிப்போட்டு அவரது காரையும் கடத்தி சென்றது.

சுங்கச்சாவடி

சிறிது தொலைவு சென்றதும் சுஷாந்தை நடுவழியில் இறக்கி விட்ட அந்த கும்பல் நாகர்கோவில் நோக்கி காரை ஓட்டி சென்றது.

ஆனால் தொடர்ந்து சென்றால் நாங்குநேரி சுங்கச்சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் சிக்கிக்கொள்வோம் என்று அறிந்த முகமூடி கும்பல் சுங்கச்சாவடிக்கு முன்பு உள்ள நெடுங்குளம் தேசிய நெடுஞ்சாலை விலக்கில் திரும்பி நெடுங்குளம் கிராமத்தை நோக்கி சென்றது.

ரூ.1½ கோடி கொள்ளை

அங்குள்ள குளத்தின் கரையோரம் 3 கார்களையும் நிறுத்திவிட்டு, சுஷாந்த் நகை வாங்குவதற்காக காரில் வைத்திருந்த ரூ.1½ கோடியை கொள்ளையடித்தனர். பின்னர் சுஷாந்த் காரை அங்கேயே விட்டுவிட்டு தாங்கள் வந்த கார்களில் அந்த கும்பல் தப்பிச் சென்றுவிட்டது.

இதற்கிடையே மர்ம கும்பல் தாக்குதலில் காயமடைந்த சுஷாந்த் நெல்லையில் உள்ள தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து மூன்றடைப்பு போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் சூப்பிரண்டு விரைந்தார்

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்த கொள்ளை சம்பவத்தில் 7 பேர் கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். தப்பிச் சென்ற முகமூடி கும்பலை பிடிக்க நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் நகைக்கடை அதிபர் சுஷாந்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் வைத்து இருந்தது கருப்பு பணமா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

பரபரப்பு

இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கும்பலை வலைவீசி தேடிவருகிறார்கள்.

நகைக்கடை அதிபரை தாக்கி ரூ.1½ கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story