தென்காசியில் ரூ.1¼ கோடியில் திட்டப்பணிகள்-நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
தென்காசியில் ரூ.1¼ கோடியில் திட்டப்பணிகள் நிறைவேற்றப்படும் என்று நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தென்காசி நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் சாதிர் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் சுப்பையா, ஆணையாளர் பாரி ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கவுன்சிலர்கள் பலர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள். அப்போது, பா.ஜ.க. கவுன்சிலர் சங்கர சுப்பிரமணியன் தனது வார்டுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கூறினார். அதுபோல் கவுன்சிலர் ராசப்பா லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறி போலி ரூபாய் நோட்டுகளை தனது தலையில் போட்டு பின்னர் அவற்றை ஆணையாளர் முன்பு மேஜையில் கொட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து கூட்டத்தில் தென்காசி சி.எம்.எஸ். கிறிஸ்தவ ஆலயம் அருகில், மின்வாரிய பஸ் நிறுத்தம், வி.டி.எஸ்.ஆர். மஹால் அருகில், நடுப்பேட்டை பள்ளிவாசல் அருகில், களக்கோடித் தெரு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நுழைவு வாயில், வடக்கு மவுண்ட் ரோடு பால்பண்ணை அருகில், தலைமை தபால் நிலையம் பகுதி, வாய்க்கால் பாலம் ஆகிய 9 இடங்களில் தலா ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் செலவில் மினி உயர் கோபுர மின்விளக்கு அமைப்பது, பொது நிதியிலிருந்து 13 வார்டுகளில் ரூ.63 லட்சத்து 70 ஆயிரம் செலவில் மழைநீர் வடிகால், சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் செய்வது என்பன உள்பட பல்வேறு திட்டப்பணிகளை ரூ.1 கோடியே 29 லட்சத்து 50 ஆயிரம் செலவில் மேற்கொள்வது என்பன உள்பட பல்ேவறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.