ஜோலார்பேட்டை நகராட்சியில் ரூ.1¾ கோடியில் சாலை பணிகள்
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை நகராட்சியில் ரூ.1¾ கோடியில் சாலை பணிகளை கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தனர்.
ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே பல வருடங்களுக்கு போடப்பட்ட சாலையானது சிதலமடைந்து வருகிறது. இதனால் நகராட்சிக்குட்பட்ட 10 இடங்களில் தார் சாலை, 12 இடங்களில் சிமெண்டு சாலை 12 என மொத்தம் 22 சாலைகள் அமைக்க ரூ.1 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும் நகராட்சிக்குட்பட்ட காவல் நிலைய சாலை பகுதியில் சாலை அமைக்கும் பணிக்கு 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.46 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இதனையொட்டி நடந்த பூமி பூஜையில் கலெக்டர் தெ. பாஸ்கர பாண்டியன், க.தேவராஜி எம்.எல்.ஏ.ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் தி.மு.க.முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் ம.முத்தமிழ்ச்செல்வி, ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன், நகராட்சி ஆணையர் பழனி, நகர மன்ற தலைவர் காவியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக 7-வது வார்டில் தூய்மை பணியை துவக்கி வைத்தனர். இதனையொட்டி நகராட்சி அலுவலகத்தில் நகரத் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.நகராட்சி அலுவலகம் எதிரே தூய்மை பணியை மேற்கொள்ளும் போது விளையாட்டு மைதானத்தில் விளையாடி கொண்டு இருந்த இளைஞர்களுடன் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடினார்.