ஊட்டியில் மார்லிமந்து அணையில் ரூ.1 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் - விரைவில் அமைக்க திட்டம்


ஊட்டியில் மார்லிமந்து அணையில் ரூ.1 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் -  விரைவில் அமைக்க திட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் முக்கிய குடிநீர் ஆதாரமான மார்லிமந்து அணையில் ரூ.1 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் முக்கிய குடிநீர் ஆதாரமான மார்லிமந்து அணையில் ரூ.1 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.

மார்லிமந்து அணை

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் சுமார் 86 ஆயிரம் மக்கள் இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டலாம். மேலும் ஓட்டல்கள், கடைகள் என சுமார் 4000 வணிக நிறுவனங்கள் உள்ளன. இதுதவிர ஆண்டுக்கு சுமார் 25 லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

இதன்படி ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தேவையான தண்ணீர் பார்சன்ஸ்வேலி, மார்லிமந்து, டைகர்ஹில், கோரிசோலை, மேல் தொட்டபெட்டா, கீழ் தொட்டபெட்டா, கோடப்பமந்து, ஓல்டு ஊட்டி மற்றும் கிளன்ராக் ஆகிய நீர் தேக்கங்களிலிருந்து வினியோகம் செய்யப்படுகின்றன.

ஊட்டி நகர் பகுதி மற்றும் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு பார்சன்ஸ்வேலி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதனால் நீர்நிலைகள் மற்றும் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு மார்லிமந்து அணை முழுக்கொள்ளளவை எட்டியது.

சுத்திகரிப்பு நிலையம்

இந்தநிலையில் ஊட்டி நகருக்கு தண்ணீர் தரும் 3-வது முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள மார்லிமந்து அணை ஆங்கிலேயர் ஆட்சியின்போது அமைக்கப்பட்டது. மிகவும் பழமை வாய்ந்த இந்த அணையில் தடுப்புச் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. மேலும் தூர்வாரப்படாமல் உள்ளதால், அதிக தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. மேலும் சுத்திகரிப்பு நிலையம் இல்லாத நிலையில் மாசடைந்த தண்ணீரே பொது மக்களுக்கு வினியோகம் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த அணையில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி செலவில் தடுப்புச் சுவர்களை சீரமைத்து புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் அணைக்கு வரும் அனைத்து நீரோடைகள் மற்றும் கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.


Next Story