ரூ.1¼ கோடி நலத்திட்ட உதவிகள்
செம்பேடு கிராமத்தில் நடந்தசிறப்பு மனுநீதிநாள் முகாமில் ரூ.1¼ கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வழங்கினார்.
செம்பேடு கிராமத்தில் நடந்தசிறப்பு மனுநீதிநாள் முகாமில் ரூ.1¼ கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வழங்கினார்.
ரூ.1¼ கோடி நலத்திட்ட உதவி
அரக்கோணம் ஒன்றியம் செம்பேடு, பெருமாள்ராஜப்பேட்டை, சித்தாம்பாடி ஆகிய கிராமங்களுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் செம்பேடு கிராமத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் இலவச வீட்டு மனைப்பட்டா, மின்னனு குடும்ப அட்டை, முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தமிழ்நாடு பழங்குடியினர் நலவாரிய அடையாள அட்டை, பேரிடர் நிவாரண நிதி, கொரோனா நிவாரண நிதி என மொத்தம் 339 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 39 லட்சத்து 87 ஆயிரத்து 260 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கி பேசினார்.
3 போகத்திற்கு தண்ணீர் உள்ளது
அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்குவதில் ராணிப்பேட்டை மாவட்டம் முன்னிலையில் உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கான தடை, அதிகளவிலான மரக்கன்றுகள் நடுதல் என பல்வேறு வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நீர்வளத்தை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக நமது மாவட்டத்தில் 3 போகம் விவசாயம் செய்வதற்கு தண்ணீர் உள்ளது. பெரும்பாலான ஏரிகளில் நீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே கிட்டத்தட்ட 125 ஏரிகளில் நீரை நிரப்பி வைத்துள்ளோம். முதியோர் உதவித்தொகை ஒரு சிலருக்கு தகுதியின் அடிப்படையில் தற்சமயம் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் உரிய விசாரனை மேற்கொண்டு தகுதி இருந்தால் மீண்டும் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி, அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா, அரக்கோணம் ஒன்றியக் குழுத் தலைவர் நிர்மலா சவுந்தர், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அம்பிகா பாபு, ஒன்றியக்குழு துணைத்தலைவர் புருஷோத்தமன், தாசில்தார் பழனிராஜன், மேற்கு ஒன்றிய செயலாளர் சவுந்தர், ஊராட்சி மன்ற தலைவர்கள் சந்தியா, நிர்மலா மற்றும் அலுவலர்கள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.