அய்யலூர் சந்தையில் ரூ.1½ கோடிக்கு ஆடுகள் விற்பனை


அய்யலூர் சந்தையில் ரூ.1½ கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 21 April 2023 12:30 AM IST (Updated: 21 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அய்யலூர் சந்தையில் ரூ.1½ கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. விவசாயிகள், வியாபாரிகள் வந்து குவிந்தனர்.

திண்டுக்கல்

அய்யலூர் சந்தை

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் வியாழக்கிழமை தோறும் ஆடு மற்றும் கோழிச்சந்தை நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலேயே பிரசித்தி பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுச்சந்தை திகழ்கிறது.

இங்கு திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் வந்து ஆடு, கோழிகளை மொத்தமாக வாங்கி செல்கின்றனர்.

அலைமோதிய கூட்டம்

இந்தநிலையில் நாளை (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நேற்று அய்யலூர் சந்தைக்கு அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வந்து குவிந்தனர்.

சந்தையில் கூட்டம் அலை மோதியது. வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு ஆடுகள், கோழிகளை வாங்கினர். இதனால் விற்பனை களை கட்டியது.

ரூ.1½ கோடிக்கு விற்பனை

ஆடுகளையும், சேவல்களையும் வியாபாரிகள் வாங்கி தங்களது வாகனங்களில் ஏற்றி சென்றனர். நேற்று 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூ.400 முதல் ரூ.450 வரையிலும், சண்டைக்கு பயன்படும் கட்டு சேவல்கள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும் விற்பனை ஆனது. இளைஞர்கள் சேவல்களை மோத விட்டுப்பார்த்து வாங்கி சென்றனர். ஆடுகள் மற்றும் கோழிகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இது குறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, சந்தையில் ஆடு, கோழி விற்பனை மும்முரமாக நடந்தது. நேற்று சுமார் ரூ.1½ கோடிக்கு விற்பனை நடந்துள்ளது என்றனர்.


Related Tags :
Next Story