உப்பார்பட்டி சுங்கச்சாவடியில் 1-ந்தேதி முதல் கட்டணம் வசூல்
தேனி அருகே உப்பார்பட்டியில் அமைக்கப்பட்டுள் சுங்கச்சாவடியில் வருகிற 1-ந்தேதி முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
உப்பார்பட்டி சுங்கச்சாவடி
திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில், தேனி அருகே உப்பார்பட்டியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில், தேனி அருகே குன்னூரில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இதில் உப்பார்பட்டியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை வருகிற 1-ந்தேதியில் இருந்து செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும், அன்று காலை 8 மணி முதல் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
கட்டணம் நிர்ணயம்
இந்த சாலை வழியாக சபரிமலைக்கு சீசன் காலங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் சென்று வருவார்கள். இதுமட்டுமின்றி கேரள மாநிலம் குமுளி, தேக்கடி, வாகமன் போன்ற சுற்றுலா இடங்களுக்கு சுற்றுலா பயணிகளும் இந்த சாலை வழியாக செல்கின்றனர். சரக்கு போக்குவரத்தும் இந்த சாலையில் அதிக அளவில் உள்ளது.
இங்கு சுங்கச்சாவடி செயல்பாட்டுக்கு வர உள்ளதால், வாகனங்களுக்கு கட்டணங்களும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை மட்டும் கடந்து செல்வது, கட்டணம் செலுத்திய நேரத்தில் இருந்து 24 மணி நேரத்துக்குள் திரும்பி பயணித்தல், ஒரு மாதத்தில் 50 முறை பயணம் செய்ய வழங்கப்படும் மாதாந்திர அனுமதிச் சீட்டு கட்டணம், சுங்கச்சாவடி அமைந்துள்ள மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வணிக வாகனங்கள் ஒரு வழிப் பயணத்துக்கான கட்டணம் என தனித்தனியாக கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் வாகனங்கள்
ஒருமுறை மட்டும் பயணிக்க கார், ஜீப், வேன் மற்றும் இலகுரக வாகனங்களுக்கு ரூ.50, இலகுரக வணிக வாகன வகை, இலசு பொருள் வாகனம் அல்லது மினிபஸ் போன்றவற்றுக்கு ரூ.85, பஸ் அல்லது 2 அச்சு டிரக் வாகனங்களுக்கு ரூ.175, 3 அச்சுகள் கொண்ட வணிக வாகனங்களுக்கு ரூ.195, 4 முதல் 6 அச்சுகள் கொண்ட கட்டுமான எந்திரங்கள், மண் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு ரூ.275, 7 அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகள் கொண்ட கனரக வாகனங்களுக்கு ரூ.340 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் வணிக பயன்பாடு அல்லாத உள்ளூர் வாகனங்களுக்கு மாதாந்திர அனுமதி கட்டணம் ரூ.315 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாதாந்திர கட்டணத்துக்கான அனுமதிச்சீட்டு தேவைப்படுபவர்கள் சுங்கச்சாவடி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.