நெல்லையில் 1 கிலோ பிச்சிப்பூ ரூ.1,500-க்கு விற்பனை
நெல்லையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 1 கிலோ பிச்சிப்பூ ரூ.1,500-க்கு விற்பனையானது.
நெல்லை சந்திப்பில் கெட்வெல் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் பூக்களின் விற்பனை மும்முரமாக நடைபெறும். இந்த நிலையில் அங்கு பூக்களின் விலை நேற்று கடுமையாக உயர்ந்து காணப்பட்டது.
மழைப்பொழிவு காரணமாக பூக்களின் விளைச்சல் குறைந்து வருகிறது. பூக்களின் மொட்டுகள் கருகி விடுகிறது. மேலும் மதுரை உள்ளிட்ட வெளியூர்களில் வருகிற பூக்களின் வரத்தும் குறைந்து காணப்படுகிறது. இதுதவிர தொடர் முகூர்த்த தினங்கள் இருப்பதால் பூக்களின் விலை அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் 1 கிலோ ரூ.600-க்கு விற்ற பிச்சிப்பூ நேற்று ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்பனையானது. அதேபோல் மல்லிகைப்பூ ரூ.700-க்கும், கேந்தி ரூ.50-க்கும், வாடாமல்லி ரூ.40-க்கும், சம்பங்கி ரூ.80-க்கும், ரோஜா பூக்கள் கட்டு ரூ.100-க்கும் விற்பனை ஆனது. மேலும் வில்வ இலை கட்டு ரூ.150-க்கும், துளசி கட்டு ரூ.5-க்கும், பச்சை கட்டு ரூ.5-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
பூக்களின் விலை அதிகரித்ததால் பாளையங்கோட்டை பூ மார்க்கெட், டவுன் பூ மார்க்கெட், சந்திப்பு பகுதிகளில் பூமாலை கட்டி விற்பனை செய்கின்ற இடங்களில் மாலைகளின் விலையும் அதிகரித்தது.