புஷ்பவனம் கடற்கரையில் 1 கி.மீ. தூரம் பரவி கிடக்கும் கடல்சேறு
புஷ்பவனம் கடற்கரையில் 1 கி.மீ. தூரம் கடல்சேறு பரவி கிடக்கிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே புஷ்பவனம் கடற்கரையில் 1 கி.மீ தூரம் கடல் சேறு பரவி கிடக்கிறது. இதை அகற்ற வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்பிடி சீசன்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடிக்கரை, மணியன்தீவு, ஆறுகாட்டுத்துறை,புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன் மகாதேவி உள்ளிட்ட 20 மீனவ கிராமங்கள் உள்ளன, இந்த மீனவ கிராமங்களில் இருந்து 65 விசைபடகுகளும், 1400 பைபர் படகுகளும் உள்ளன.
கோடிக்கரையில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலம் ஆகும். இந்த சீசன் காலத்தில் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
1 கி.மீ. தூரம் பரவி கிடக்கும் கடல்சேறு
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இந்த நிலையில் புஷ்பவனம் கடற்கரை பகுதியில் கடல் சேறு வெளியேறி உள்ளது.இதில் புஷ்பவனம் கடற்கரை பகுதியில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சேறு பரவி உள்ளது.
இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க படகை கடலுக்கு கொண்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த கடல்சேற்றை அகற்ற வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.