நூதன முறையில் ரூ.1 லட்சம் திருடிய 2 பேர் கைது
திருச்செந்தூரில் நூதன முறையில் ரூ.1 லட்சம் பணத்தை திருடி சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் நூதன முறையில் ரூ.1 லட்சம் பணத்தை திருடி சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
முகநூல் மூலம் பழக்கம்
தர்மபுரி மாவட்டம் கடகத்தூர் அருகே உள்ள கொளகத்தூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் முனிசேகர் (வயத 34). இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு முகநூல் மூலம் ஆறுமுகநேரி காமராஜர்புரத்தை சேர்ந்த கணேசமூர்த்தி (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், முனிசேகரிடம் தங்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றால் ராமர் பட்டாபிஷேகம் செய்த நாணயத்தை வீட்டில் வைத்து பூஜை செய்தால் பிரச்சினை தீரும் என்றும், இதற்கு ரூ.1 லட்சம் தேவைப்படும் எனவும் கணேசமூர்த்தி கூறியுள்ளார்.
பணம் திருட்டு
இதை நம்பி முனிசேகர் கடந்த 6-ந் தேதி திருச்செந்தூர் வந்து டி.பி. ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். அப்போது கணேசமூர்த்தியை போனில் தொடர்பு கொண்டு விடுதிக்கு வரச்சொல்லியுள்ளார்.
இந்நிலையில் கணேசமூர்த்தி, தனது நண்பர் பேயன்விளை பாஸ்நகரை சேர்ந்த செந்திலை அழைத்து கொண்டு முனிசேகர் தங்கியிருந்த அறைக்கு சென்றுள்ளார். அங்கு பேசிக்கொண்டு இருக்கும் போது முனிசேகர் குளியலறைக்கு சென்றுவிட்டு திரும்பினார்.
அப்போது அவர் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணத்துடன் கணேசமூர்த்தியும், செந்திலும் மாயமானார்கள்.
2 பேர் கைது
இதனால் அதிர்ச்சியடைந்த முனிசேகர், கணேசமூர்த்தியை போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் இணைப்பு கிடைக்கவில்லை. இதில் பதற்றம் அடைந்த முனிசேகர் ஊருக்கு திரும்பி சென்றுவிட்டார்.
பின்னர் 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் திருச்செந்தூர் வந்து தாலுகா போலீஸ் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சோனியா வழக்குபபதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் முரளிதரன் விசாரணை நடத்தி கணேசமூர்த்தி, செந்தில் ஆகியோரை கைது செய்தார்.