தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் 1½ லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது


தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் 1½ லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது
x

தமிழகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் 1½ லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

திருப்பத்தூர்

தமிழகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் 1½ லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் திருப்பத்தூர் அருகே ஆதியூரில் உள்ள பொதிகை கல்லூரியில் நடந்தது.

கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். சி.என்.அண்ணாதுரை எம்.பி, எம்.எல்.ஏக்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேலைவாய்ப்பு முகாமில் 1,680 வேலைநாடுனர்கள் கலந்து கொண்டனர். 103 நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான இளைஞர்களை தேர்வு செய்தனர். இதில் 263 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பணிநியமன ஆணை

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டு, பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

அந்த வகையில் மாநிலம் முழுவதும் எடுத்துக் கொண்டால் பெரிய அளவிலானி 100-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில் 16,477 நிறுவனங்கள் பங்கு பெற்றது. அதில் 6,74,962 பேர் பங்கேற்று, 1,18,491 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதிலும் குறிப்பாக 912 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும் 1052 சிறிய அளவில் முகாம்கள் நடத்தப்பட்டு, 12,258 நிறுவனங்கள் பங்கேற்று, 1,43,992 பேர் நேரடியாக கலந்து கொண்டு, அதில் 36,060 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

1½ லட்சம் பேருக்கு வேலை

படித்து முடித்தவுடன் அரசு வேலைக்கு தான் செல்ல வேண்டும் என்று சொன்னால் அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிக்க முடியாது. அரசு வேலை என்று சொன்னால் அரசு போடுகின்ற திட்டங்கள் அனைத்தும் மக்களிடத்தில் கொண்டு சென்று நடைமுறைப்படுத்துகின்ற பணியில் தான் அரசு வேலைகள் இருக்கும்.

அரசின் மூலமாக ஒரு ஆண்டிற்கு போடப்படுகின்ற நிதியின் மூலமாக அனைத்து துறைகளும் இயங்குகிறது. அரசாங்கம் மூலமாக அத்தனை பேருக்கும் வேலைவாய்ப்பு தர முடியாது என்று கருதிய காரணத்தினால் தமிழக முதல்-அமைச்சர் தனியார் துறைகளை இணைத்துக் கொண்டு அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

அதன்படி தனியார் துறைகளின் மூலமாக சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது.

எனவே இந்த வேலைவாய்ப்பை பெறுகிறவர்கள் தகுதி அடிப்படையில் பணியாற்றினாலும் கூட, அரசு வேலைக்கு அல்லது மேற்படிப்பிற்கு நீங்கள் முயற்சி செய்யலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மண்டல இணை இயக்குனர் (வேலைவாய்ப்பு) சேலம் லதா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரேவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story