108 ஆம்புலன்ஸ் மூலம் 1½ லட்சம் பேர் மீட்பு


108 ஆம்புலன்ஸ் மூலம் 1½ லட்சம் பேர் மீட்பு
x

கடந்த ஆண்டில் வேலூர் உள்பட 4 மாவட்டங்களில் 108 ஆம்புலன்ஸ் மூலம் 1½ லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

வேலூர்

ஆம்புலன்ஸ் சேவை

பொதுமக்களுக்கு சேவை அளிக்கும் பொருட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏழை மக்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரும் பயன்பெற்று வருகின்றனர். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை கொண்ட கோட்டத்தில் 118 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாகனங்கள் மூலம் கடந்த ஆண்டு மட்டும் ஏராளமானவர்கள் பயன்பெற்றுள்ளனர்.

பாம்பு கடி, விஷம் குடித்தல் போன்ற பிரச்சினைகளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 653 பேரும், திருப்பத்தூரில் 799 பேரும், வேலூரில் 985 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,935 பேரும் பயன் அடைந்துள்ள னர். மேலும் வயிறு வீக்கம், வயிறு வலி போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் தவித்தவர்கள், நாய்கள், மாடுகள் போன்ற விலங்குகள் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், அடிதடியில் காயமடைந்தவர்கள், இருதய பிரச்சினையில் உயிருக்கு போராடியவர்கள், கொரோனா உதவியை நாடியவர்கள், மழை, வெள்ளம் போன்ற இயற்கை சம்பந்தப்பட்ட பிரச்சினையில் சிக்கியவர்கள், காய்ச்சல் போன்ற நோய்களில் பாதிக்கப்பட்டவர்கள், தீக்காயம் அடைந்தவர்கள், பிரசவத்துக்காக அணுகியவர்கள், கிணற்றில் விழுந்தவர்கள், மற்றும் விபத்துகளில் சிக்கியவர்கள் போன்ற பல்வேறு வகைகளில் 108 ஆம்புலன்சை ஏராளமானவர்கள் நாடி உள்ளனர்.

மருத்துவமனையில் சேர்ப்பு

அதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 23,464 பேரும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 30,087 பேரும், வேலூர் மாவட்டத்தில் 33,303 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 61,558 பேரும் என மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 412 பேர் 108 ஆம்புலன்சால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக திட்ட மேலாளர் கண்ணன் தெரிவித்தார்.


Next Story