ரூ.1¾ லட்சம் மீட்பு
தஞ்சை பெரியகோவிலில் சுற்றுலா பயணி தவறவிட்ட ரூ.1¾ லட்சம் மீட்கப்பட்டு உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
தஞ்சை பெரியகோவிலில் சுற்றுலா பயணி தவறவிட்ட ரூ.1¾ லட்சம் மீட்கப்பட்டு உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
சுற்றுலா பயணி
மராட்டிய மாநிலம் புனே அருகே கோகினூர் ஐரீஷ் பார்க் பகுதியை சேர்ந்தவர் உமேஷ்ஜோதி (வயது33). இவர் தனது குடும்பத்தினருடன் தஞ்சை பெரியகோவிலுக்கு நேற்றுகாலை வந்தார். பின்னர் இவர்கள் கொண்டு வந்த உடமைகளில் ஒரு பையை மட்டும் பெரியகோவில் வளாகத்தில் பாதுகாப்பு அறையில் வைத்துவிட்டு கோவிலுக்குள் சென்றனர். அங்கு சாமிகளை தரிசனம் செய்துவிட்டு, கோவில் சிற்பங்களையும், கட்டிட கலைகளையும் பார்த்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்ட பையை எடுக்காமல் காரில் புறப்பட்டு தாராசுரத்திற்கு சென்றனர்.
அங்கே சென்ற பிறகு தான் தாங்கள் கொண்டு வந்த பையை காணவில்லை என்பது தெரியவந்தது. அந்த பையில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரமும், ஆதார் அட்டை, செல்போன், ஏ.டி.எம். கார்டு போன்றவை இருந்தது. மேலும் அந்த பையை எங்கே வைத்தோம் என்பதை கூட மறந்துவிட்டார்கள். உடனே தாராசுரத்தில் இருந்து புறப்பட்டு தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் தங்களது பையை காணவில்லை என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சம்பந்தம், உஷா ஆகியோர் பெரியகோவில் முழுவதும் தேடி பார்த்தனர். ஆனால் அந்த பையை பற்றி எந்தவித தகவலும் தெரியவில்லை.
ஒப்படைப்பு
இந்தநிலையில் பெரியகோவில் வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் ஒரு பெட்டி மட்டும் பூட்டியே இருந்தது. அந்த பெட்டியில் பையை வைத்துவிட்டு சென்றவர்கள் மீண்டும் எடுக்கவில்லை என்பதும் தெரியவந்தது. அந்த அறையை சிவனேசன் என்பவர் திறந்து பார்த்தபோது அதில் ஒரு பை இருந்தது. அந்த பையை திறந்தபோது அதில் பணம் இருந்தது. உடனே அந்த பையை மேற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இது யாருடைய பை? என விசாரித்தபோது தான் ஏற்கனவே புகார் கொடுத்த உமேஷ்ஜோதிக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. உடனே நேற்றுஇரவு அவரை போலீசார் நேரில் அழைத்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம், செல்போன், ஏ.டி.எம்.கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றை ஒப்படைத்தனர்.