வாலிபரிடம் நூதன முறையில் ரூ.1¼ லட்சம் மோசடி
சிறிய தொகையை முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் எனக்கூறி வாலிபரிடம் நூதன முறையில் ரூ.1¼ லட்சத்தை மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள சின்னமடம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 28). இவர் கடந்த 23-ந் தேதியன்று வேலை விஷயமாக யூ-டியூப்பில் தேடிக் கொண்டிருந்தார். அப்போது வந்த விளம்பரத்தில் அமேசான் பகுதிநேர வேலை என்று இருந்ததை பார்த்து அதனை கிளிக் செய்தார்.
உடனே ஒரு எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் இணைப்பு கொடுக்கப்பட்டு அதிலிருந்து சதீஷ்குமாரை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், ஒரு லிங்கை அனுப்பினார். அந்த லிங்கிற்குள் சதீஷ்குமார் சென்று தனக்கென பயனர் முகவரி, பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவேற்றம் செய்தார். பின்னர் அந்த நபர், சதீஷ்குமாரை மீண்டும் தொடர்பு கொண்டு ரூ.200-ஐ ரீசார்ஜ் செய்யுமாறு கூறினார். அதன்படி சதீஷ்குமார் ரீசார்ஜ் செய்து ரூ.300 ஆக திரும்ப பெற்றுள்ளார்.
வாலிபரிடம் பணம் மோசடி
அதன் பின்னர் டெலிகிராம் ஐடி மூலம் தொடர்புகொண்ட மர்ம நபர், சதீஷ்குமாரிடம் சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறினார். இதை நம்பிய சதீஷ்குமார், கடந்த 24, 25-ந் தேதிகளில், தான் கணக்கு வைத்திருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட கூகுள்பே, போன்பே, பேடிஎம் மூலமாக 10 தவணைகளாக ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 900-ஐ, அந்த நபர் அனுப்பியிருந்த லிங்கினுள் இருந்த ரீசார்ஜ் ஆப்ஷன் மூலம் அனுப்பி வைத்தார். ஆனால் டாஸ்க் முடித்த பின்னரும் சதீஷ்குமாருக்கு சேர வேண்டிய தொகையை கொடுக்காமல் மர்ம நபர்கள் ஏமாற்றி மோசடி செய்துவிட்டனர்.
இதுகுறித்து அவர், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.