நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கிலோவுக்கு 1 ரூபாய் வசூல்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கிலோவுக்கு 1 ரூபாய் வசூலிப்பதாக விழுப்புரத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கி விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-
திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு உரிய முறையில் பயிற்சி அளிப்பதில்லை. 23 வகையான புதுரக நெல், காய்கறிகள், மர வகைகளை வெளியிட்டுள்ளனர். அதுபற்றி விவசாயிகளுக்கு சரியான முறையில் சொல்லவில்லை. பயிற்சி வகுப்புகளையும் உரிய முறையில் நடத்துவதில்லை. விழுப்புரம் சாலாமேடு பொன்னேரி, மருதூர் ஏரிகளில் கழிவுநீர் கலக்கப்படுகிறது. அதை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
கிலோவுக்கு 1 ரூபாய் வசூல்
அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கிலோவுக்கு 1 ரூபாய் என்று வசூலிக்கிறார்கள். வருங்காலங்களில் இதுபோன்று விவசாயிகளிடம் கேட்கக்கூடாது. இதை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
மேலும் விவசாயிகளின் தேவைக்கேற்ப மாவட்டத்தில் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும், தளவானூர், எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டுகளை விரைந்து சீரமைக்க வேண்டும். ஏரி ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் பார்க்காமல் அகற்ற வேண்டும். அதுபோல் ஏரிகளில் வண்டல் மண் எடுக்க இலவச அனுமதியளிக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள்.
இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சி.பழனி பேசியதாவது:-
கூடுதலாக 20 கொள்முதல் நிலையங்கள்
விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்கு தேவையான வண்டல் மண்ணை பெற்றிடும் விதமாக அனுமதிக்கப்பட்ட ஏரி, குளங்களில் இருந்து எடுத்துக்கொள்ள உரிய ஆவணம் செய்யப்படும்.
தற்போது 46 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் அனுமதியுடன் இயங்கி வரும் நிறுவனத்தின் மூலம் கூடுதலாக 20 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. மேலும் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இ-நாம் திட்டத்தின் மூலம் உரிய விலை கிடைப்பதற்கான வழிவகை ஏற்படுத்திக்கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) செயற்பொறியாளர் ஷோபனா, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் கணேசன், துணை இயக்குனர் பெரியசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சண்முகம், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் மதனகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.