தடை செய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
நாகையில் தடை செய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக அரசு ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. ஆனால் தடையையும் மீறி நாகை மாவட்டத்தில் பரவலாக பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நடந்து வந்தது. இது குறித்து கலெக்டருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதை தொடர்ந்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவுபடி, நாகை நகராட்சி ஆணையர் அறிவுரைப்படி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கார்த்திகேயன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் சேகர் ஆகியோர் தலைமையில் களப்பணி உதவியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் 2-வது நாளாக நாகை, நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு நடத்தியதில் சுமார் 1 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு ரூ.18 ஆயிரத்து 700 அபராதமாக விதிக்கப்பட்டது.