1 டன் ராட்சத யானை திருக்கை மீனின் வயிற்றில் இருந்த 35 கிலோ குட்டி
ராமேசுவரம் மீனவர்கள் பிடித்துவந்த ஒரு டன் எடையிலான ராட்சத யானை திருக்கை மீனின் வயிற்றில் 35 கிலோ எடை கொண்ட குட்டி மீன் இருந்ததை ஆச்சரியத்துடன் அப்பகுதி மக்கள் பார்த்து சென்றனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் மீனவர்கள் பிடித்துவந்த ஒரு டன் எடையிலான ராட்சத யானை திருக்கை மீனின் வயிற்றில் 35 கிலோ எடை கொண்ட குட்டி மீன் இருந்ததை ஆச்சரியத்துடன் அப்பகுதி மக்கள் பார்த்து சென்றனர்.
யானை திருக்கை மீன்
ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் வடக்கு கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் ரூபன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகு ஒன்றில் 7 மீனவர்கள் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். அங்கு மீன்களுக்காக விரிக்கப்பட்டிருந்த வலையில் பல வகை மீன்களுடன் ராட்சத யானை திருக்கை மீனும் சிக்கியது,
நேற்று காலை மீனவர்கள் கரை திரும்பியதும், அந்த திருக்கை மீனை கடற்கரைக்கு கொண்டு வந்து போட்டனர். அது சுமார் 1 டன் எடை கொண்டதாக இருந்தது.
வயிற்றில் இருந்த குட்டி மீன்
இதை தொடர்ந்து அந்த மீனை வியாபாரி ஒருவர் வாங்கினார். அதிக எடை இருந்ததால் அந்த திருக்கை மீனை கடற்கரையிலேயே வைத்து கருவாடாக்குவதற்காக துண்டு, துண்டாக வெட்டினர். அப்போது திருக்கை மீனின் வயிற்று பகுதியில், 35 கிலோ எடையில் குட்டி திருக்கை மீன் இருந்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த குட்டியை ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டனர். பின்னர் அந்த குட்டி மீனும் கருவாடுக்காக துண்டாக்கப்பட்டது.
இது பற்றி நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் எஸ்.பி.ராயப்பன் கூறும் போது, "அதிக எடையில் யானை திருக்கை மீன் சிக்குவது அரிதுதான். அதுவும் தற்போது சிக்கிய இந்த யானை திருக்கை மீன் சுமார் ஒரு டன் எடை இருக்கும். அதிக எடை இருந்தாலும் இந்த மீனுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று சொல்ல முடியாது. 1 கிலோ ரூ.50-க்கு வரை மட்டுமே விலை போகும்" என்றார்