காரில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
காரில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
களியக்காவிளை, ஜூன்.27-
விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார் கொண்ட குழுவினர் ேநற்று அதிகாலை குழித்துறை, மேல்புறம், அருமனை ஆகிய பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வேகமாக வந்த காரை நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால், டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார்.
இதையடுத்து அதிகாரிகள் தங்களது வாகனங்களில் பின்தொடர்ந்து விரட்டிச் சென்று களியல் பகுதியில் வைத்து காரை மடக்கினர். உடனே, டிரைவர் காரை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதையடுத்து அதிகாரிகள் காரை சோதனை செய்தனர். அப்போது, காரில் ஒரு டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடந்த முயன்றது தெரியவந்தது. பின்னர், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப குடோனிலும், காரை விளவங்கோடு தாசில்தார் அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். மேலும், தப்பி ஓடிய டிரைவர் யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.