கொல்லங்கோடு அருகே மாட்டு சாண குழிக்குள் தவறி விழுந்து 1½ வயது குழந்தை சாவு


கொல்லங்கோடு அருகே மாட்டு சாண குழிக்குள் தவறி விழுந்து 1½ வயது குழந்தை சாவு
x

கொல்லங்கோடு அருகே மாட்டு சாண குழிக்குள் தவறி விழுந்து 1½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு,

கொல்லங்கோடு அருகே மாட்டு சாண குழிக்குள் தவறி விழுந்து 1½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

குழந்தை

கொல்லங்கோடு அருகே வள்ளவிளை தேரிவிளாகம் பகுதியை சேர்ந்தவர் அருண் பிரகாஷ். இவருடைய மனைவி ஹின்றா (வயது 34). இவர்களுக்கு 1½ வயதில் குழந்தை உள்ளது.

அதே பகுதியில் ஹின்றாவின் தாயார் வீட்டில் மாட்டு கொட்டகை உள்ளது. இந்த கொட்டகையின் அருகே குழந்ைத விளையாடுவது வழக்கமாம். இந்தநிலையில் சம்பவத்தன்று ஹின்றாவின் குழந்தை அங்கு விளையாடிக் கொண்டிருந்தது.

குழிக்குள் தவறி விழுந்து சாவு

அப்போது அந்த சமயத்தில் யாரும் இல்லை. சிறிது நேரம் கழித்து அங்கு ஹின்றா வந்துள்ளார். ஆனால் விளையாடிய இடத்தில் குழந்தையை காணவில்லை.

இதனால் பதற்றமடைந்த அவர் அங்குமிங்கும் தேடிய போது மாட்டு சாண குழிக்குள் குழந்தை அசைவற்ற நிலையில் கிடந்தது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஹின்றா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக பாறசாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். பரிசோதனை செய்த டாக்டர், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து கொல்லங்கோடு போலீசார் விசாரணை நடத்தியதில், குழிக்குள் மாட்டு சாணத்துடன் மழை தண்ணீரும் கலந்திருந்தது. இதனால் குழிக்குள் தவறி விழுந்த குழந்தை அதில் மூழ்கி இறந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாட்டு சாண குழிக்குள் தவறி விழுந்து குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story