10 மதுக்கடைகளை மூட பரிந்துரை


10 மதுக்கடைகளை மூட பரிந்துரை
x
தினத்தந்தி 6 May 2023 12:30 AM IST (Updated: 6 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 10 மதுக்கடைகளை மூட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல்


தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். இந்த அறிவிப்பு மதுவால் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்த குடும்பங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. மேலும் தங்கள் பகுதியில் இருக்கும் மதுக்கடை மூடப்படுமா? 500 மதுக்கடைகளும் எப்போது மூடப்படும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே மாநிலம் முழுவதும் மூடுவதற்கு தகுதியான 500 மதுக்கடைகளை கண்டறியும்படி அரசு உத்தரவிட்டது. அதன்படி மாவட்டம் வாரியாக டாஸ்மாக் அதிகாரிகள் மதுக்கடைகளை கணக்கெடுத்து அறிக்கை அனுப்பி வருகின்றனர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 155 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படுகின்றன. இவற்றில் மூடுவதற்கு உரிய மதுக்கடைகளை கண்டறியும் பணி கடந்த சில நாட்களாக நடந்தது. இதையொட்டி பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டு தலங்களுக்கு அருகே அமைந்துள்ள மதுக்கடைகளின் விவரம் சேகரிக்கப்பட்டது.

அதேபோல் தினசரி மது விற்பனை மிகவும் குறைவாக இருக்கும் மதுக்கடைகள், குடியிருப்புகளுக்கு நடுவே மக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகள், வாடகை கட்டிடங்களில் பிரச்சினையில் இருக்கும் மதுக்கடைகள் ஆகியவற்றின் விவரங்களும் சேகரிக்கப்பட்டன. இறுதியில் திண்டுக்கல் நாகல்நகர், ரவுண்டுரோடு பகுதிகளில் 3 மதுக்கடைகள், பழனியில் 2 மதுக்கடைகள் உள்பட மொத்தம் 10 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் அரசிடம் இருந்து அறிவிப்பு வந்ததும் 10 கடைகளில் இருக்கும் மதுவகைகள் பிறகடைகளுக்கு மாற்றப்பட்டு, கடைகள் மூடப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



Next Story