வேனில் கடத்திய 10 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல்


தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

முள்ளக்காடு அருகே வேனில் கடத்திய 10 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

முள்ளக்காடு அருகே வேனில் கடத்தி செல்லப்பட்ட 10 மூட்டை புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேகமாக வந்த வேன்

முத்தையாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகாராஜன் தலைமையிலான போலீசார் நேற்று முள்ளக்காடு அருகே உள்ள நேசமணி நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேன் ஒன்று வேகமாக வந்தது. தடுப்புகளை வைத்து அந்த வேனை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது வேனில் இருந்த 5 பேர் தப்பி ஓட முயன்றுள்ளனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

புகையிலை பொருட்கள் கடத்தல்

விசாரணையில், அவர்கள் முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த கணேசன், பெங்களுரைச் சேர்ந்த மகேஷ், அருண்குமார், சதீஷ்நாயக், சாசாங்நாயக் என தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குபின் முரணாக பதில் கூறினர். இதை தொடர்ந்து வேனில் போலீசார் சோதனை நடத்தினர். அந்த வேனில் 10 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றை விற்பனைக்காக திருச்செந்தூர் நோக்கி அவர்கள் வேனில் கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

5 பேர் கைது

இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசன், மகேஷ், அருண்குமார், சதீஷ்நாயக், சாசாங்நாயக் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த இருந்த ரூ.1 லட்சம் பணம் மற்றும் புகையிலை பொருட்களை வேனுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த புகையிலை பொருட்களை எங்கிருந்து கடத்தி வந்தனர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story