10 செந்தமிழ் நகர்கள் உருவாக்கப்பட்டு உள்ளன
தஞ்சை மாவட்டம் முழுவதும் 10 செந்தமிழ் நகர்கள் உருவாக்கப்பட்டு உள்ளன என்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.
கும்பகோணம்;
தஞ்சை மாவட்டம் முழுவதும் 10 செந்தமிழ் நகர்கள் உருவாக்கப்பட்டு உள்ளன என்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.
வீட்டு மனைப்பட்டா
கும்பகோணம் அருகே உள்ள அண்ணலக்ரஹாரம் முகுந்தநல்லூர் பகுதியில் விளிம்புநிலையில் உள்ள மக்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டா மற்றும் மின் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது.விழாவுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். கல்யாணசுந்தரம் எம்.பி., அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் வெங்கடேஸ்வரன் வரவேற்றார். விழாவில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-
அடிப்படை வசதி
தஞ்சை மாவட்டத்தில் "செந்தமிழ் நகர்" என்ற விளிம்பு நிலை மக்களுக்காக பட்டா வழங்கி வீடுகள் கட்டும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் மாவட்டம் முழுவதும் 10 செந்தமிழ் நகர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் 2 கட்டங்களை உள்ளடங்கியது.முதல் கட்டமாக பட்டா கொடுப்பதற்கான தகுதியான இடங்களை நேரடி பேச்சுவார்த்தை மூலம் தனியாரிடமிருந்து பெற்று அனைத்து அடிப்படை வசதிகளும் குறிப்பாக குடிநீர், சாலை, கழிவுநீர் வசதி மற்றும் தெருவிளக்கு வசதிகள் செய்யப்பட்டு ஒவ்வொரு மனையும் அளவீடு செய்யப்பட்டு, கற்கள் நடப்பட்டு விலையில்லா வீட்டு மனைப்பட்டா வழங்கப்படுகிறது.
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இரண்டாவதாக ஒவ்வொரு பயனாளிகளுக்கும் நல்லதரமான வீடுகள் கட்டிக் கொடுப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். அந்த வகையில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் நலனில் அக்கறை கொண்டு, அவர்களின் குடியிருப்புகளுக்கு சென்று உணவருந்தி, கோரிக்கைகளைதெரிந்து கொண்டு வந்தார்.அதன் பிறகு கலெக்டர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கில் அனைத்து விளிம்பு நிலை மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் சென்றடைய வேண்டும். குறிப்பாக சாதி சான்றிதழ், வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் சென்றடைய வேண்டும் என வலியுறுத்தினார்.
மின் இணைப்பு
இதன்படி முகுந்தநல்லூர் கிராமத்தில் தற்போது விளிம்புநிலை மக்களுக்கு 38 விலையில்லா வீட்டு மனை பட்டா மற்றும் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் காயத்ரி, துணைத்தலைவர் கணேசன், தஞ்சை மாவட்ட ஊராட்சித்தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் பாஸ்கர், மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சித்தலைவர் பிரேமாவதி நன்றி கூறினார்.