100 ஆண்டு பழமையான சிறிய கோவில்கள் திருப்பணிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு


100 ஆண்டு பழமையான சிறிய கோவில்கள் திருப்பணிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு
x

குமரி மாவட்டத்தில் 100 ஆண்டுகள் பழமையான சிறிய கோவில்களில் திருப்பணிகள் செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ள இருப்பதாக அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

கன்னியாகுமரி

திருவட்டார்:

குமரி மாவட்டத்தில் 100 ஆண்டுகள் பழமையான சிறிய கோவில்களில் திருப்பணிகள் செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ள இருப்பதாக அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

அமைச்சர்கள் ஆய்வு

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேற்று குமரி மாவட்டம் வந்தார். தொடர்ந்து நேற்று மாலையில் அமைச்சர்கள் சேகர் பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் திருவட்டார் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழா பணிகளை ஆய்வு செய்தனர். அவர்களுடன் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் சேகர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே திருப்பணிகள் நிறைவடைந்து ஆண்டுகள் பல கடந்து இன்னும் கும்பாபிஷேகம் நடைபெறாத கோவில்களை உடனடியாக பட்டியலிட்டு அந்த கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

ரூ.10 கோடி ஒதுக்கீடு

அதனடிப்படையில், தமிழகம் முழுவதும் 200 கோவில்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள சிறிய கோவில்கள் கணக்கெடுக்கப்பட்டு அந்த கோவில்களின் புகைப்படங்களை கொண்டு சிறிய ஆல்பம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த ஒவ்வொரு சிறிய கோவில்களுக்கும் திருப்பணி மேற்கொள்ள தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.

சிவாலயம்

குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களில் ஒன்றான திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் திருப்பணிகள் செய்ய ரூ.84 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

மீதமுள்ள 11 கோவில்களுக்கு நேரடியாக சென்று தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம்.

குமரி மாவட்டத்தை தமிழக முதல்- அமைச்சர், பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக கோவில்களுக்கென அதிகளவில் நிதியுதவி ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும், இன்னும் ஏதேனும் கோவில்களின் பணிகள் விடுப்பட்டிருந்தால் அந்த பணிகளையும் நிறைவேற்ற அரசு காத்திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், இணை ஆணையர் ஞான சேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story