அழிக்காலில் ரூ.10½ கோடியில் கடலரிப்பு தடுப்பு பணி நடைபெறுகிறது அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
அழிக்கால் கிராமத்தில் ரூ.10½ கோடியில் கடல் அரிப்பு தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
நாகர்கோவில்,
அழிக்கால் கிராமத்தில் ரூ.10½ கோடியில் கடல் அரிப்பு தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
சித்த மருத்துவ கட்டிடம் திறப்பு
கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆலங்கோட்டை முதல் யோகோவா நகர் வரையிலான சாலை மற்றும் ஆலங்கோட்டை ரசல் தெரு முதல் சிறுமின்விசைத் திட்டம் வரையிலான சாலை பணிகள், கணபதிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடக்க நிகழ்ச்சி மற்றும் கணபதிபுரம் ஆரம்ப சுகாதார மைய வளாகத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சித்த மருத்துவ கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி ஆகியவை நேற்று கணபதிபுரத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு புதிய பணிகளை தொடங்கி வைத்தும், புதிய சித்த மருத்துவ கட்டிடத்தை திறந்தும் வைத் தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, அழிக்கால் கிராமத்தில் ரூ.10½ கோடி மதிப்பில் கடலரிப்பு தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. எந்த பணியும் கிடப்பில் போடப்படவில்லை. உள்ளூர் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து குவாரிகளில் கல், மணல், ஜல்லிகளை வழங்க வேண்டுமென கலெக்டர் உத்தரவு பிறப்பித்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) மீனாட்சி, மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி மேபல் அருள்மணி, கணபதிபுரம் பேரூராட்சி செயல் அதிகாரி டேவிட்சன், வட்டார மருத்துவ அதிகாரி பிஷ்மா, வட்டார வேளாண்மை குழுத் தலைவர் சற்குரு கண்ணன், தி.மு.க. மீனவரணி முன்னாள் மாவட்ட அமைப்பாளர் நசரேத் பசலியான், வக்கீல் சதாசிவம், ஜீவா, சுகாதார ஆய்வாளர் மதன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நவீன எக்ஸ்ரே
பின்னர் நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நவீன எக்ஸ்ரே எந்திர அறையை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார். பின்னர் உள்நோயாளிகளிடம் அங்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரம் குறித்து கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். அப்போது அமைச்சர் மனோதங்கராஜ் கூறியதாவது:-
மணவாளக்குறிச்சியில் உள்ள அரியவகை மணல் ஆலை நிறுவனம், இந்திய அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனம் தமது நிறுவன சமூக பொறுப்பின் கீழ் ரூ.18 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வழங்கியது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி முதல்வர் கிளாரன்ஸ் டேவி, மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா,மணவாளக்குறிச்சி அரியவகை மணல் ஆலை நிறுவன பொது மேலாளர் மற்றும் ஆலைத்தலைவர் செல்வராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.