ரூ.10 கோடியில் சாலை சீரமைப்பு
கூடலூர்-கேரளா இடையே ரூ.10 கோடியில் பழுதடைந்த சாலையை சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கூடலூர்,
கூடலூர்-கேரளா இடையே ரூ.10 கோடியில் பழுதடைந்த சாலையை சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
குண்டும் குழியுமான சாலை
கேரளா-கர்நாடகா மாநில எல்லையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி உள்ளது. இங்கிருந்து கேரள மாநிலம் மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களுக்கு தார் சாலை செல்கிறது. இந்த சாலையில் தினமும் சரக்கு வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் தமிழக, கேரள அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. சீசன் காலங்களில் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா வாகனங்களும் அதிகளவு இயக்கப்படுகிறது.
இந்தநிலையில் ஆண்டுதோறும் பெய்யும் தொடர் மழை, பராமரிப்பு இன்மை உள்ளிட்ட காரணங்களால் கடந்த 8 ஆண்டுகளாக சாலை மிகவும் குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். சமீபத்தில் சாலை பள்ளத்தில் சரக்கு லாரி சிக்கியது. மேலும் வாகனத்தின் டயர் கழன்று ஓடியது.
வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
தொடர்ந்து சாலையை சீரமைக்க கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதற்கிடையே கூடலூர்-கேரளா இடையே பழுதடைந்த சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இருப்பினும், சாலை சீரமைப்பு பணி தொடங்காமல் காலதாமதம் ஆகி வந்தது. இந்தநிலையில் கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் 11 கி.மீட்டர் தூரம் ரூ.10 கோடி செலவில் சாலையை சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
குண்டும், குழியுமான சாலைக்கு மேல்பகுதியில் புதியதாக சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, சில ஆண்டுகளாக பழுதடைந்த சாலையால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து வாகனங்களும் விபத்துக்குள்ளானது. நீண்ட நாள் கோரிக்கைக்கு பிறகு சாலை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது என்றனர்.