10 அடி தூரத்துக்கு உள்வாங்கிய சாலை
தஞ்சை அருகே 10 அடி தூரத்துக்கு சாலை திடீரென உள்வாங்கியது. இதனால் பள்ளியக்ரஹாரம்- தென்பெரம்பூர் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
தஞ்சை அருகே 10 அடி தூரத்துக்கு சாலை திடீரென உள்வாங்கியது. இதனால் பள்ளியக்ரஹாரம்- தென்பெரம்பூர் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
குடிநீர் சப்ளை
தஞ்சை மாநகராட்சி பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அரியலூர் மாவட்டம் திருமானூரில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் ராட்சத குழாய்கள் மூலம் தஞ்சை பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றின் இடதுகரையில் உள்ள நீரேற்று நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக பூமிக்கு அடியில் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தஞ்சை அருகே வெண்ணாற்றின் வலது கரையில் அமைக்கப்பட்டிருந்த குழாயில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் கசிய தொடங்கியுள்ளது. தொடர்ந்து தண்ணீர் கசிவு இருந்ததால், சாலைக்கு அடியில் மண் அரிப்பு ஏற்பட்டு வந்தது.
சாலை உள்வாங்கியது
இந்த நிலையில் நேற்று திடீரென சாலை சுமார் 10 அடி நீளத்துக்கு உள்வாங்கியது. சாலை திடீரென உள்வாங்கியதை அந்த பகுதியில் இருப்பவர்கள் பார்த்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதனால் பள்ளியக்ரஹாரம் - தென் பெரம்பூர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து செல்லாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கொள்ளிடத்தில் இருந்து புதிதாக கூட்டு குடிநீர் திட்டத்திற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழாய் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. ஆறு மாதத்திற்குள்ளே குழாயில் நீர் கசிவு ஏற்பட்டு சாலையின் உள்ளே மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து அரிப்பு ஏற்பட்டதால், சாலை சுமார் 10 அடி தூரத்துக்கு மேல் உள்வாங்கி உள்ளது. எனவே பெரும் விபத்துகள் ஏற்படுவதற்கு முன் உரிய ஆய்வு செய்து உள்வாங்கிய சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றனர்.