வாடிப்பட்டி அருகே நாய்கள் கடித்து 10 ஆடுகள் சாவு
வாடிப்பட்டி அருகே நாய்கள் கடித்து 10 ஆடுகள் இறந்தது.
வாடிப்பட்டி,
மதுரை வாடிப்பட்டி அருகே கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 45). பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார்.இவரது மகள் பிரியதர்ஷினி. இவர் வாடிப்பட்டி பேரூராட்சி 14-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இவர்கள் வீட்டின் பின்புறத்தில் தொழுவம் அமைத்து 10 ஆடுகளை வளர்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆடுகளுக்கு இரை வைத்துவிட்டு தூங்க சென்றனர். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு எழுந்து வந்து பார்த்தபோது ஆட்டுக்கொட்டகையில் இருந்த 10 ஆடுகளும் நாய்களால் கடித்து குதறி இறந்து கிடந்தன. அதை கண்டு சந்திரன் அதிர்ச்சி அடைந்தார். வாடிப்பட்டி பேரூராட்சி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகம் இருப்பதால் அவற்றைப் பிடிக்க வேண்டும் என்று பலமுறை அப்பகுதி மக்கள் மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தனர். சிறுவர்-சிறுமிகளை நாய்கள் கடிக்கும் முன் தெருநாய்களை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.