ரூ.42 கோடி வரி பாக்கியை வசூலிக்க 10 குழுக்கள்
திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.42 கோடி வரி பாக்கியை வசூலிக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
ரூ.42 கோடி பாக்கி
திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொத்துவரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், கடைகளின் வாடகை, இதர குத்தகை தொகை உள்ளிட்டவை மூலம் ஆண்டுக்கு ரூ.39 கோடி வருவாய் ஆகும். அதன்படி இந்த நிதி ஆண்டுக்கான வருவாயில் இதுவரை ரூ.20 கோடி மட்டுமே வசூலாகி இருக்கிறது. மேலும் ரூ.19 கோடி வசூல் செய்ய வேண்டியது இருக்கிறது.
அதேநேரம் பழைய வரி வசூல் நிலுவை ரூ.23 கோடி இருக்கிறது. இதன்மூலம் திண்டுக்கல் மாநகராட்சிக்கு மொத்தம் ரூ.42 கோடி வரி வசூல் பாக்கி இருக்கிறது. இதில் சொத்து வரி ரூ.15 கோடியும், குடிநீர் கட்டணம் ரூ.12 கோடியும் ஆகும். இதற்கிடையே மாநகராட்சியில் பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட வேண்டியது இருக்கிறது. எனவே வரி பாக்கியை அடுத்த மாதம் (மார்ச்) இறுதிக்குள் வசூலிக்கும்படி ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
10 குழுக்கள்
இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளை கொண்ட 10 குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழுவினர் ஒவ்வொரு பகுதியாக சென்று மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தும்படி மக்களிடம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை வசூலித்து வருகின்றனர்.
இதுதவிர பொதுமக்கள் தாமாக முன்வந்து வரியை செலுத்தும் வகையில் மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து நாட்களிலும் வரிவசூல் செய்யப்படுகிறது. மேலும் வரியை முறையாக செலுத்தாத கட்டிடங்களுக்கு குடிநீர் இணைப்பை துண்டித்தல், அபராதம் விதித்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் கூறினார்.