ரெயிலில் கடத்திய 10 கிலோ குட்கா பறிமுதல்
அரக்கோணத்தில் ரெயிலில் கடத்திய 10 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் அரக்கோணம் மற்றும் திருத்தணி மார்க்கமாக வந்து செல்லும் அனைத்து ரெயில்களிலும், ரெயில் நிலையத்திலும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை காலை 3.30 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தது.
அப்போது ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார்கள் ரெயில் பெட்டிகளில் ஏறி சோதனை நடத்தினர். சோதனையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இறங்கி பிளாட்பாரத்தில் சென்ற முதியவரை போலீசார் பிடித்து விசாரித்த போது அவர் காட்பாடி தாராபடவேடு பகுதியை சேர்ந்த ராஜா ஞானகண் (வயது 67) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த பையை சோதனை செய்ததில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 10 கிலோ குட்கா இருந்தது. அதனை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்து வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.