ரெயிலில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல்
வாணியம்பாடியில் ரெயிலில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரெயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் வரை செல்லும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி- ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த போது ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது பின் பக்கமுள்ள பொது பெட்டியில் பயணிகளின் உடமைகள் வைக்கும் பகுதியில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தபோது அதில் ஒரு பண்டலில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ரெயில் பெட்டிகளில் இருந்த பயணிகளிடம் போலீசார் விசாரணை செய்தனர். ஆனால் கஞ்சாவை யார் கடத்தி வந்தனர் என்பது தெரியவில்லை. அதைத்தொடர்ந்து கஞ்சாவை கைப்பற்றி ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.